சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு, நடிகர் பிரகாஷ் ராஜ் மீதும் நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறது தமிழக பாஜக.
எம்.பி திருமாவளவன் தலைமையில் விசிக சார்பில் வருடந்தோறும் பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ்ஜூக்கு, “அம்பேத்கர் சுடர் விருது” வழங்கப்பட்டது. விருது வாங்கிய பிறகு, பிரகாஷ் ராஜ் பேசியபோது, மோடியை கடுமையாக விமர்சித்தார். “கடந்த 10 வருடங்களாக இந்த மன்னரை நான் எதிர்த்து கொண்டு இருக்கிறேன். இனி மோடியை மன்னர் என்று சொல்லமுடியாது. அவர் ‘தெய்வக்குழந்தை’ ஆகிவிட்டார். இனிமேல் நாம அவரை தேர்ந்தெடுக்கமுடியாது. அவரால் நாட்டுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் நம்மால் அவரை திட்ட முடியாது. தெய்வம் சோதிக்கிறது என்றுதான் சொல்லமுடியும். மோடியை கொஞ்சம் பாருங்களேன்.. ஒரு ஃபாசிஸ்ட். ஒரு சர்வாதிகாரி. அவர் தேரில் தான் நிற்பார். விமானத்தில் தான் வருவார்.. மக்கள் பூ போடுவார்கள்.. அவர் மக்கள் பக்கத்திலே நிற்க மாட்டார்.. மக்கள் வேலிக்கு அந்த பக்கம் நிற்பார்கள்.. மக்களின் ஸ்பரிசம் தெரியாதவன், மக்களின் வியர்வையை தொடாதவன், மக்களின் பசியை அறியாதவவனுக்கு மக்களை பற்றி எப்படி புரியும்? அவர் தெய்வ மகன் கிடையாது.. டெஸ்ட் டியூப் பேபி” என்று பிரதமரை ஒருமையில் பேசி விமர்சித்திருந்தார்.
பிரகாஷ் ராஜின் இந்த பேச்சைக்கேட்டு, பாஜக கொந்தளித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி எக்ஸ் பதிவில், காட்டமாக கேள்விகளை எழுப்பியிருக்கிறார். “முதலமைச்சரை அவன், இவன் என்று ஏக வசனத்தில் பேசியது தவறு தான் என்று சொன்ன நீதிபதி, பிரதமரை அவன், இவன் என்று பேசிய பிரகாஷ் ராஜ் மீது நடவடிக்கை எடுப்பாரா? பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், பிரதமரை அவன், இவன் என்று பேசியதை ரசித்து கேட்டு கொண்டிருந்தது சரி என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா? ஒருமையில் யாரையும் பேசுவதற்கு சவுக்கு சங்கருக்கும் உரிமையில்லை, பிரகாஷ் ராஜுக்கும் உரிமையில்லை. சட்டப்படி தவறு தான். சவுக்கு சங்கரை கைது செய்த காவல்துறை, பிரகாஷ்ராஜை கைது செய்யுமா? முதல்வருக்கு மரியாதை? பிரதமருக்கு அவமரியாதையா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.