மதுரை வருமான வரித்துறை ஆபீஸை முற்றுகையிடும் போராட்டம்: பி.ஆர். பாண்டியன்!

மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தை இன்று முற்றுகையிடப்போவதாக, பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் அதிரடியாக அறிவித்திருக்கிறார்கள்.

2 நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கடந்த பிப்ரவரி மாதம் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசின் ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் கூறியுள்ளார். அதற்கு தமிழக முதல்வர் இதுவரை பதில் தெரிவிக்கவில்லை. தமிழகத்துக்கு வரும் ஒவ்வொரு நீராதாரங்களும் பறிபோய் கொண்டிருக்கிறது.. இதை திமுக அரசு தடுத்து நிறுத்தவில்லை. இது தொடர்பாக முதல்வர் மவுனம் சாதித்து வருகிறார். அதனால், தமிழக நீராதாரங்களை பாதிக்கும் வகையில் செயல்படும் கேரள அரசை கண்டித்து வருகிற 13-ம் தேதி மூணாறு செல்லும் சாலையில் உள்ள சின்னாறு சோதனை சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். அதற்கு முன்பு முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசை கண்டித்து மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தை வரும் 28-ம் தேதி முற்றுகையிட உள்ளோம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம், மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேர்தலில் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க தமிழக அரசு மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. சிறப்பு அனுமதியை பெற்று உடனடியாக கணக்கெடுப்பு நடத்திட முன்வர வேண்டும். நெல் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35,000மும், பருத்திக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50,000மும், வாழைக்கு ரூபாய் 1 லட்சமும் இழப்பீடாக வழங்கிட வேண்டும். மற்ற பயிர்களுக்கு உற்பத்தி செலவை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்கிட முன்வர வேண்டும்.

தமிழ்நாட்டில் நதிநீர் உரிமைகள் பறிபோய் கொண்டு இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து விட்டதாக கூறி புதிய அணை கட்டுவதற்கான கேரளா அரசு சட்ட விரோதமாக கொடுத்த விண்ணப்பத்தின் மீதாக ஆய்வு தொடங்குகிறது.. இதனை தமிழ்நாடு அரசு மூடி மறைக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புதிய அணை கட்டப்பட்டால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள விளை நிலங்கள் முற்றிலும் அழிந்து போகும் நிலையும், குடிநீர் அடியோடு அழிந்து விடும் நிலையால், மக்கள் அகதிகளாக வெளியேறும் பேராபத்து ஏற்படும் சூழல் உருவாகியிருக்கின்றது.

உச்சநீதிமன்றம் வலுவாக அணை உள்ளது என்று பலமுறை தீர்ப்பு சொல்லியும், கேரளா அரசு ஏற்க மறுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் புதிய அணை கட்டுவதற்கான விண்ணப்பத்தை வழங்கியுள்ளது. இதனை மத்திய அரசு நிராகரிக்க வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மே 28 காலை 11 மணிக்கு மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அந்தவகையில், இன்றைய தினம் விவசாயிகள் பலரும் திரண்டு சென்று, முற்றுகை போரராட்டம் நடத்த உள்ளதால், மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.