அரசியல் உள்நோக்கத்துடன் அண்ணாமலை கருத்து கூறியுள்ளார், நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் தான் அண்ணாமலை என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் நலன் சார்ந்த அரசியலை அதிமுக முன்னெடுக்கிறது. இந்துத்துவா கொள்கைக்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி தெரிவித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் பேசியிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை காட்டினார். அவர் மிகச்சிறந்த இந்துத்துவவாதியாக இருந்தார். அதிமுக ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து விலகிச் சென்று விட்டது. இதனால் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்கள் பாஜக பக்கம் வந்துவிட்டார்கள். இதனால் பாஜக தமிழகத்தில் பெரிய இடத்தை பிடித்தது” என பேசியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கம் அளித்த அண்ணாமலை, “தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை ஒரு சிறந்த ஹிந்துத்துவவாதி என்று நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? கர சேவை குறித்து பேசிய ஜெயலலிதா அது தவறு இல்லை எனக் கூறியிருக்கிறார். இந்துத்வா என்பது மதம் சார்ந்தது அல்ல. அது ஒரு வாழ்வியல் முறை.. ஜெயலலிதா இந்துத்துவாவாதி இல்லை எனக் கூறும் அதிமுகவினர் என்னுடன் விவாதம் நடத்த தயாரா?” என சவால் விட்டிருந்தார்.
அண்ணாமலையின் பேச்சு ஏற்கனவே அதிமுகவினரை கொந்தளிக்க வைத்திருந்த நிலையில், தனது பேச்சை நிறுவும் வகையில் அவர் மீண்டும் விளக்கம் அளித்தது மீண்டும் அதிமுகவினரை ஆத்திரமடையச் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் துணை பொதுச் செயலாளருமான கேபி முனுசாமி கூறியதாவது:-
ஜெயலலிதாவை இந்துத்வா தலைவர் என அரசியல் உள்நோக்கத்துடன் அண்ணாமலை கருத்து கூறியுள்ளார். திராவிட இயக்கத்தின் வரலாறு தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை. மக்கள் நலன் சார்ந்த அரசியலை அதிமுக முன்னெடுக்கிறது. இந்துத்துவா கொள்கைக்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் இருக்கும் வரை பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றவர் ஜெயலலிதா. பாஜகவின் தேவைக்கு அதிமுகவை பயன்படுத்த முயற்சிக்கின்றனர். மக்கள் ஏற்றுக்கொண்டால் தான் தமிழகத்தில் பாஜக வளரும். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் தான் அண்ணாமலை. அவருடன் விவாதிக்க நாங்கள் அரசியல் அனுபவம் அற்றவர்களா. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.