காந்தி படம் மூலமாகவே மகாத்மா காந்தியை உலகம் தெரிந்து கொண்டது என்று கூறி இருப்பதன் மூலம் மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை நரேந்திர மோடி அழிக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, “உலகின் ஒரு பெரிய ஆன்மா, மகாத்மா காந்தி. இந்த 75 ஆண்டுகளில், மகாத்மா காந்தியைப் பற்றி உலகிற்கு தெரிவிக்க வேண்டியது நம் பொறுப்பு அல்லவா? அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. என்னை மன்னியுங்கள், ஆனால் ‘காந்தி’ திரைப்படம் எடுக்கப்பட்டபோதுதான் முதல் முறையாக அவரைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் உலகில் ஏற்பட்டது. அந்தப் படத்தை நாம் எடுக்கவில்லை. மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை உலகம் அறிந்திருக்கிறது. காந்தி அவர்களை விட குறைந்தவர் அல்ல. உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகு இதைச் சொல்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
மகாத்மா காந்தி குறித்த நரேந்திர மோடியின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்த தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது:-
மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை மோடி அழிக்கிறார். 1982-க்கு முன் மகாத்மா காந்தி அங்கீகரிக்கப்படாத உலகில், வெளியேறும் பிரதமரான நரேந்திர மோடி வாழ்கிறார் போலும். வாரணாசி, டெல்லி, அகமதாபாத்தில் காந்திய நிறுவனங்களை அழித்தது நரேந்திர மோடி அரசுதான்.
மகாத்மா காந்தியின் தேசியத்தை புரிந்து கொள்ளாததுதான் ஆர்எஸ்எஸ் ஊழியர்களின் அடையாளம். அவர்களின் சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்ட சூழல்தான் நாதுராம் கோட்சே, காந்தியைக் கொல்ல வழிவகுத்தது. 2024 தேர்தல் மகாத்மா பக்தர்களுக்கும் கோட்சே பக்தர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை. வெளியேறும் பிரதமர் மோடி மற்றும் அவரது கோட்சே பக்தர் சகாக்களின் தோல்வி உறுதியாகிவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.