தமிழக மாணவர்களை மனுதர்ம மாணவர்களாக மாற்ற ஆளுநர் முயற்சி செய்கிறார் என திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை ராஜ்பவனில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய ஆளுநர் ரவி கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 50 சதவீதம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. பல கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர்கள் தான் பாடம் நடத்துகிறார்கள். கல்லூரி மாணவர்களை அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்துகின்றனர். இது கல்லூரி மாணவர்கள் செய்ய வேண்டிய வேலை இல்லை. சில இடங்களில் உயர் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை பள்ளிகளுக்கான உபகரணங்கள் வாங்க பயன்படுத்தப்படுகிறது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு 1,500 மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுகிறார்கள். அதில் 5 சதவிகித மாணவர்களே திறன் மிக்கவர்களாக இருக்கின்றனர்.
தமிழக பாடத்திட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலு நாச்சியார் போன்ற ஒரு சில சுதந்திரப் போராட்ட தியாகிகளை பற்றி மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் இயக்கங்கள் குறித்த வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. இது எனக்கு வேதனை அளிக்கிறது. பாடத்திட்டத்தில் தலித் தலைவர்களை பற்றி அதிக வரலாறுகள் இல்லை. ஆனால், திராவிட தலைவர்கள் மற்றும் திராவிட இயக்க வரலாறே நிறைந்துள்ளது. அது மட்டுமே வரலாறு இல்லை. வரலாற்றை மறைப்பது அவமதிப்பதாகும்.
நெட் தேர்வு குறித்து தனியார் பல்கலைக்கழகங்கள் பயிலும் மாணவர்களுக்கு அதிக விழிப்புணர்வு உள்ளது. அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களான ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, நானோ தொழில்நுட்பம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் பின்தங்கி விடுவோம். மாணவர்கள் மத்தியில் உயர் கல்வி, வேலை வாய்ப்பு, எதைப்படிக்க வேண்டும் என்பது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. கல்வியாளர்கள் மாணவர்களை வழிநடத்த வேண்டும். மத்திய அரசின் செயல் திட்டங்கள் சிறப்பாக உள்ளன. மாணவர்களை சரியான வழியில் வழி நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஆளுநர் ரவிக்கு பதில் அளித்துள்ளார் திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன். இதுபற்றி அவர் கூறியதாவது:-
ஆளுநர் ரவி தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார். உதகையில் ஓய்வெடுப்பதற்காகச் சென்ற ஆளுநர் துணைவேந்தர்களை அழைத்துச் சென்றுள்ளார். மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தமிழ்நாடு கல்வியில் முன்னேற்றத்தை அடைந்துள்ளது. உத்தர பிரதேசம், பீகார் மாநில கல்வி முறையை தமிழ்நாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார். தமிழக மாணவர்களை மனுதர்ம மாணவர்களாக மாற்ற ஆளுநர் முயற்சி செய்கிறார். பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் இல்லை. பல்கலைக்கழகங்களுக்கான தலைவராக கல்வியாளரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.