விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணிநேரம் தியானம் மேற்கொள்ள பிரதமர் மோடி இன்று முதல் வரும் 1ம் தேதி வரை 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வந்துள்ளார். இந்நிலையில் தான் விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தமிழ் பாரம்பரிய உடை அணிந்திருந்தது கவனத்தை பெற்றுள்ளது.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. 7 வது மற்றும் கடைசி கட்ட லோக்சபா தேர்தல் ஜுன் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் 7 வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து பிரதமர் மோடி 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் இந்தியா முழுவதும் பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்ட நிலையில் 3 நாள் தியானத்துக்காக அவர் கன்னியாகுமரி வந்தார்.
டெல்லியில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்தார். அதன்பிறகு அவர் பகவதியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். தரிசனத்துக்கு பிறகு பிரதமர் மோடி படகில் கடலுக்கு நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் பாறை நினைவு மண்டபத்துக்கு சென்றார். இங்கு தான் அவர் 45 மணிநேரம் தியானம் செய்து நாளை மறுநாள் மதியம் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.
இந்நிலையில் தான் விவேகானந்தர் பாறை நினைவு மண்டபத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த உடை தற்போது கவனம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி தமிழ் பாரம்பரிய உடையில் அங்கு சென்றார். அதாவது பிரதமர் மோடி பட்டு சட்டை, வேஷ்டி அணிந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குள் அடியெடுத்து வைத்தார். அதன்பிறகு அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பகவதி அம்மன் கால் பதித்த இடத்தில் மலர் வைத்து பிரதமர் மோடி வணங்கினார். அன்னை சாரதா தேவி, ராமகிருஷ்ண பரமஹம்சர் படத்துக்கும் பிரதமர் மோடி மலர்தூவி வணங்கினார். இதையடுத்து நினைவு மண்டபத்தில் உள்ள சுவாமி விவேகானந்தரின் முழு உருவ சிலையின் முன்பு சென்ற பிரதமர் பாதத்தில் மலர்வைத்து வணங்கினார். அங்கு சில விநாடிகள் பிரதமர் மோடி கை கூப்பி, கண்களை மூடி அமைதியாக நின்றார். அதன்பிறகு அவர் விவேகானந்தர் தியான மண்டபத்தில் நின்றபடி கடல் அழகை ரசித்தார்.