பிரதமர் மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்ய 3 நாள் பயணமாக இன்று கன்னியாகுமரி வந்தார். பிரதமர் மோடியின் இந்த பயணத்துக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி திடீரென்று பிளானை மாற்றி பகவதியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு லோக்சபா தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பிறகு பிரதமர் மோடி ஆன்மிக வழிப்பாட்டு தலங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 2014ல் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி பிரதாப்கருக்குச் சென்றார். பிரதாப்கரில் தான் சிவாஜி தலைமையிலான மராட்டியப் படைகளுக்கும், ஜெனரல் அப்சல் கான் தலைமையிலான பீஜப்பூர் படைகளுக்கும் இடையே போர் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு 2019 தேர்தல் பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு சென்று குகையில் தியானம் செய்தார். அதன்படி 7 வது மற்றும் கடைசி கட்ட லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்று முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி தியானத்துக்காக கன்னியாகுமரி வந்துள்ளார்.
கன்னியாகுமரி என்பது சுவாமி விவேகானந்தர் பாரத மாதாவை தரிசனம் செய்த இடமாகும். மேலும் சுவாமி விவேகானந்தர் தியானம் செய்ததும் இங்கே தான். இந்நிலையில் தான் சுவாமி விவேகானந்தர் நினைவாக கன்னியாகுமரியில் கடலுக்குள் நடுவே சுவாமி விவேகானந்தர் பாறை நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் தான் பிரதமர் மோடி இன்று, நாளை, நாளை மறுநாள் என 3 நாட்கள் தியானம் மேற்கொள்ள உள்ளார். பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை முன்கூட்டியே திட்டமிடப்பட்டத நிகழ்வாகும். இதற்கிடையே தான் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை விதிமீறலாம் என காங்கிரஸ், திமுக கட்சிகள் குற்றம்சாட்டி பிரதமர் மோடி வருகைக்கு அனுமதிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தை நாடி உள்ளனர்.
ஆனால் பிரதமர் மோடியின் வருகைக்கு தேர்தல் ஆணையம் எந்த கண்டிஷனையும் வழங்கவில்லை. இதனால் பிரதமர் மோடி திட்டமிட்டப்படி இன்று பிற்பகல் 3.55 மணிக்கு விமானத்தில் திருவனந்தபுரம் வந்திறங்கினார். அதன்பிறகு அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேட்டில் வந்திறங்கினார். அங்கிருந்து பிரதமர் மோடி காரில் கன்னியாகுமரி கடற்கரைக்கு சென்று தனிப்படகில் கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்துக்கு செல்வார். அங்கு இன்று முதல் 3 நாட்கள் பிரதமர் மோடி தியானம் மேற்கொள்வார் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணத்தில் கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது பிரதமர் மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்வதற்கு முன்பு பகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி பிரதமர் மோடி கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேட்டில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதும், அவர் நேரடியாக காரில் பகவதியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்று சாமி தரிசனம் செய்தார். பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டது. அதன்பிறகு பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்தை முடித்த பிறகு பிரதமர் மோடி படகில் கடல் நடுவேயுள்ள விவேகானந்தா் பாறை நினைவிடத்துக்கு படகில் சென்றார். அங்கு அவர் ஸ்ரீபாத மண்டபத்தில் பாறையில் பதிந்துள்ள பகவதி அம்மன் கால் பதித்த இடத்தை மலர் வைத்து வணங்குகிறார். அதனைத் தொடர்ந்து 31ம் தேதி முழுவதும் தனிமையில் தியானத்தில் ஈடுபட உள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்களும் சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 2000க்கும் அதிகமான போலீசார் பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கடற்படை, கடலோர காவல் படையினரும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.