இந்துத்துவா என்ற குறுகிய வட்டத்திற்கு ஜெயலலிதாவை சிக்க வைக்க வேண்டாம்: புகழேந்தி!

ஜெயலலிதாவை இந்துத்துவ தலைவர் என்று சொன்ன அண்ணாமலைக்கு ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச்சிறந்த இந்துத்துவா தலைவர் என்றும், இந்து மதத்தை அவர் நேரடியாக ஆதரித்து வந்தார் என்றும் ஒரு பேட்டியில் கூறினார். இதுபோலவே தமிழிசை உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்தனர். இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஜெயலலிதாவுடன் 33 வருடங்களுக்கு மேல் உடன் இருந்த சசிகலா, “ஜெயலலிதாவுக்கு தெய்வ நம்பிக்கை இருந்ததே தவிர, மத நம்பிக்கை இருந்ததில்லை” என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்ச்சியாக விவாதங்களை கிளப்பியுள்ளது.

இந்த சூழலில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு புகழேந்தி, “ஏன் இந்துத்துவா பிரச்னை தொடங்கியது என்றே தெரியவில்லை. கரசேவைக்காக ஜெயலலிதா ஆள் அனுப்பினார் என்பது சுத்தமான பொய். அண்ணாமலையிடம் யாரோ தவறாக கூறியுள்ளனர். தான் கரசேவைக்காக யாரையும் அனுப்பவில்லை என்றும், அரசியல் லாபத்துக்காக எதிரிகள்தான் இவ்வாறு பரப்புகிறார்கள் என்று ஜெயலலிதாவே கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “இந்த விவகாரத்தை அண்ணாமலை ஏன் இப்போது கையில் எடுக்க வேண்டும். பாஜகவுடன் எங்கள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நல்ல இணக்கத்துடன் இருக்கிறார். அது வேண்டாம் என்பது எனது எண்ணம் இல்லை. மதங்களால் பிரிக்க முடியாத தலைவிதான் ஜெயலலிதா. வாஜ்பாய், அத்வானி உள்பட எந்தத் தலைவராவது ஜெயலலிதாவை இந்துத்துவ தலைவர் என்று கூறியிருக்கிறார்களா? பிரதமர் மோடி முகத்தில் தாடி வைத்திருக்கிறார்.. அதனால் தந்தை பெரியாரை பார்த்துதான் தாடி வைத்துள்ளார் என்று சொன்னால் அதனை பாஜகவினர் ஏற்றுக்கொள்வார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பலரையும் எம்.எல்.ஏவாக, எம்.பியாக, அமைச்சராக ஆக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. திருச்சி பொதுத் தொகுதியில் தலித் எழில் மலையை நிறுத்தி வெற்றிபெற வைத்தவர்.. பாகிஸ்தானில் கூட பரமசிவனை நிறுத்தி வெற்றிபெற வைக்கும் ஆற்றல் உள்ள தலைவியாகவே ஜெயலலிதாவை நாங்கள் பார்த்தோம். ஆகவே, இந்துத்துவா என்ற குறுகிய வட்டத்திற்கு ஜெயலலிதாவை சிக்க வைக்க வேண்டாம். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தது. இந்த சூழலில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கும் பெங்களூரு புகழேந்தி, தற்போது பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.