பிரதமர் மோடி நேற்று மாலையில் இருந்து குமரி விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார். இந்த நிலையில், அவர் விவேகானந்தா! இவர் வெறுப்பானந்தா! என்று கவிதை நடையில் பிரதமர் மோடியை திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் ஒரு கட்ட தேர்தல் மட்டுமே நடக்க இருக்கிறது. நாளை 7 ஆம் கட்ட தேர்தல் நடக்கிறது. நேற்று மாலையுடன் அதற்கான தேர்தல் பிரசாரங்களும் ஓய்ந்தது. இதன் மூலம் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிந்தது. லோக்சபா தேர்தலையொட்டி கடந்த 3 மாதங்களாக நாட்டில் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். பிரதமர் மோடியும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இதேபோல் இந்தியா கூட்டணி யில் உள்ள கட்சிகளும் பாஜகவை விமர்சித்து வந்தன.
இந்த நிலையில், பிரசாரம் அனைத்தும் ஓய்ந்த நிலையில், 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். நேற்று மாலை 6 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு வந்த பிரதமர் மோடி அங்கு மாலை 6 மணி முதல் நாளை சனிக்கிழமை பிற்பகல் வரை, சுமார் 45 மணி நேரம் தியானம் செய்கிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி குமரி விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
நரேந்திரா × நரேந்திரமோடி அவர் விவேகானந்தா! இவர் வெறுப்பானந்தா! அவர் வெறுப்பை உமிழவில்லை! அதனால்- விவேகானந்தா ஆனார். இவருக்கு வெறுப்பு அரசியல் தான் பெருமுதலீடு. அதனால்- ‘வெறுப்பானந்தாவாக’ வலம் வருகிறார். வானுயர்ந்து நிற்கும் வள்ளுவனின் புகழ்நிலத்தில்.. எளியோரை ஏய்க்கும் எத்தர்களின் வித்தைகள் ஒருபோதும் எடுபடாது. இவ்வாறு தொல் திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.