“ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்ற முறை வந்தால், திருமாவளவன் கூட பிரதமராகலாம். ராகுல் காந்தியை பிரதமராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. திமுகவும் அதை விரும்புகிறது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோட்டில் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:-
மக்கள் 48 மணி நேரம் அமைதியாக இருந்து, சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத்தான், வாக்குப் பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்பே பிரச்சாரத்தை தடை செய்திருக்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி, தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்கிறார்.இதை, அனைத்து தொலைக்காட்சி, பத்திரிகைகளில் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இது என்ன நியாயம்? என்று எனக்குத் தெரியவில்லை. தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக இருக்கிறது. இந்திய தேர்தல் வரலாற்றில் இதுபோன்ற மோசமான தேர்தல் நடந்தது கிடையாது. தேர்தல் முடிவுக்குப் பிறகு இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்போது, தேர்தல் ஆணையத்தில் தவறு செய்தவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள்.
பிரதமர் மோடி ஏன் தியானம் செய்கிறார்? என்று எனக்குப் புரியவில்லை. அதனால் என்ன கிடைக்கப்போகிறது என்றும் விளங்கவில்லை. பொதுவாக, தியானம், யாகம் செய்பவர்கள் எதை எதிர்பார்த்து செய்கிறார்களோ அது கிடைப்பதில்லை. உதாரணமாக, வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியாரை ஒழிக்க வேண்டும் என திருவிதாங்கூர் மன்னர் யாகம், தியானம் நடத்தினார். யாகத்தின் முடிவில் மன்னருக்குத்தான் ஆபத்து ஏற்பட்டது. எனவே, யாகம், தியானம் செய்கின்றவர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மோடியின் மீதுள்ள அன்பினால் சொல்கிறேன். தியானத்தை கைவிடுங்கள். கடைசியில் முடிவு வேறு மாதிரி வந்துவிடும்.
பிரதமராக பதவி வகிப்பவர், 1980-க்கு முன்பு இந்த உலகத்துக்கு காந்தியைத் தெரியாது என்று சொன்னால், எவ்வளவு பெரிய அறிவிலியை நாம் பிரதமராக ஏற்றுக் கொண்டு இருகிறோம் என வெட்கப்பட வேண்டியுள்ளது. இந்தத் தேர்தலில் பிரதமர் மோடியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. புரி ஜெகந்நாதர் கோயில் விவகாரத்தில், ஒட்டுமொத்த தமிழர்களையும் திருடர்கள் என்று பிரதமர் மோடி சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாது. அடுத்தமுறை அவர் தமிழகம் வரும்போது, திருடர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்பதை தமிழர்கள் காண்பிக்க இருக்கிறார்கள். நாங்களும் திமுகவும் கூட்டணியில் இருக்கிறோம். தீய சக்தியான பிரதமர் மோடியை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியான காரணத்துக்காக, நாம் ஒன்றாக இருந்து செயல்பட வேண்டும். ஸ்டாலின் நல்லாட்சியைத் தந்திருக்கிறார் என்று நான் ஈரோடு கூட்டத்தில் சொன்னேன். செல்வப்பெருந்தகையும் அதனை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் கான்வென்டில் தான் நானும் படித்தேன். அங்குள்ள சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெயலலிதா ஜெபம் செய்தது எனக்குத் தெரியும். அதேபோல், முஸ்லிம்களின் இப்தார் நோன்பில் ஜெயலலிதா பங்கேற்ற போது நானும், மூப்பனார், நல்லகண்ணு போன்றோரும் பங்கேற்று இருக்கிறோம். ஆகவே ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, எம்மதமும் சம்மதம் என்ற கொள்கை உடையவர். அவரை ஒரு குறுகிய வட்டத்தில் அண்ணாமலை அடைக்கப் பார்க்கிறார் என்றால், அவர் அறியாமையில் இருக்கிறார்; அவருக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை என்று தான் அர்த்தம்.
கஞ்சா புகைக்கும் பழக்கம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. ஒதுக்குப்புறமான இடங்களில் கஞ்சா பயிரிடுவது அந்தக் காலத்தில் சகஜமாக இருந்தது. ஆனால், இப்போது கஞ்சா புகைப்பது தமிழகத்தில் மட்டுமல்ல, பஞ்சாபில் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அங்குள்ள கிராமங்களில் எல்லாம் இளைஞர்கள் மட்டுமல்லாது பெண்களும் கஞ்சாவுக்கு அடிமையாகி உள்ளனர். ஆக, கஞ்சா பழக்கம் ஆதியிலிருந்தே இருக்கிறது. கஞ்சாவை அந்த காலத்தில் மருந்துக்காக உபயோகப்படுத்தினார்கள். தமிழகத்தில் கஞ்சா பரவலை முதல்வர் மு.க.ஸ்டாலின் இரும்புக் கரம் கொண்டு அடக்குவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதேபோல் நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைவில் தமிழக போலீஸார் கண்டுபிடிப்பார்கள்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இண்டியா கூட்டணியினர் ஒன்று சேர்ந்து, பிரதமர் குறித்து முடிவு எடுப்பார்கள். ஸ்டாலினும், ராகுலும் யாரை நினைக்கிறார்களோ அவர்கள் பிரதமராக வர வாய்ப்புள்ளது. ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்ற யோசனையை திருமாவளவன் சொல்லியிருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யானால், அவரும் பிரதமராக வர வாய்ப்பிருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஐந்து பிரதமர் என்பது வராது. ஒருவேளை, அப்படி வந்தால் என்ன நஷ்டம்? அதிகாரிகள் மாற்றப்படுவதில்லையா 10 ஆண்டுகளாக ஒரே பிரதமர் இருந்தும் பயனில்லை. ராகுல் காந்தியை பிரதமராக தேர்வு செய்ய நாங்கள் விரும்புகிறோம். திமுகவும் அதை விரும்புகிறது. மற்ற கூட்டணித் தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை பொறுத்துத்தான் யார் பிரதமர் என்று தெரியவரும்.
பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறும்போது தான் விடிவுகாலம் ஏற்படும். தேர்தல் முடிவு வரும்போது, அண்ணாமலை எங்கு இருப்பார்? என்பதை உறுதி செய்து கொண்டு அவர் மற்றவர்களைப் பற்றி பேசலாம். இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அளித்த வாக்குறுதிகளை, அவர்கள் ஆளும் மாநிலங்களிலாவது குறைந்தபட்சம் நிறைவேற்றுவார். மம்தா மட்டுமல்ல ஒடிசா நவீன் பட்நாயக்கும் இந்த கூட்டணியில் வருவார்.
தமிழக அரசின் மின்சார கொள்கையில் சில குழப்பங்கள் உள்ளன. அதில் ஒருமித்த கருத்து ஏற்படுத்த வேண்டும். குறைகளை தீர்க்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார். அதிமுக ஆட்சியில் அதானியிடமிருந்து மட்டமான நிலக்கரியை வாங்கி ரூ.6,000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து மோடியோ, அண்ணாமலையோ பேசவில்லை. இது தொடர்பாக விசாரணைக் கமிஷன் தேவையில்லை. ஊழல் செய்திருந்தால் அதற்குக் காரணமானவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.