கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில், கலைஞரை மீண்டும் நேரில் சந்திக்கும் ஆச்சர்ய அனுபவத்தை தூண்டும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க ‘காலம் உள்ளவரை கலைஞர்’ – நவீன தமிழகத்தின் சிற்பிக்கு நவீன கண்காட்சி என்ற கலைஞரின் புகைப்பட கண்காட்சி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியை திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று காலை திறந்து வைத்தார்.
இப்பிரம்மாண்ட அரங்கத்தில் கலைஞரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளான ‘திருவாரூரில் ஆரம்பித்து சென்னை மெரினா கடற்கரை நினைவிடம் வரை’ என 100-க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கண்காட்சி அரங்கிற்குள் உள்ளே நுழைந்ததும் ஹாலோகிராபி தொழில்நுட்பத்துடன் கூடிய 40 வயது தோற்றத்துடன் கலைஞர் நேரடியாக மக்களுடன் தமிழை போற்றி பேசும் கவிதை காவியம் இடம்பெற்றுள்ளது. மேலும் ஒரு அரங்கில் வாழும் வரலாறு முத்தமிழறிஞர் கலைஞரின் கதைப்பாடல்’ காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் ஒரு அரங்கில் கலைஞர் எப்போதும் அவர் விரும்பும் முரசொலி அலுவலகத்தில் உரையாடுவதுபோல் ஒரு செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஒரு அறையில் நவீன தொழில்நுட்பத்துடன் 3டி கேமராவில் பதிவு செய்த கலைஞரின் வரலாற்று காவியமும் கலைஞர் வழியில் தொடரும் திராவிட அரசின் மக்கள் போற்றும் அரசின் சாதனைகளை விளக்கி கூறும் 3டி காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வரும் 10ம் தேதி வரை 10 நாட்களுக்கு புகைப்பட கண்காட்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, திரைப்பட கவிஞர் பா.விஜய் சென்னை மாநகர மேயர் பிரியா சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி ஜோசப் சாமுவேல் வெற்றி அழகன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் திமுக பகுதி செயலாளர் முரளி ராஜசேகர் முரளிதரன் இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் வர்த்தக அணி லயன் உதயசங்கர் மாமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டனர். மேலும் தங்களுடைய செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பிரகாஷ்ராஜ் கூறியதாவது:-
பேச்சு வரவில்லை.. மனது 30 ஆண்டுகள் பின்னோக்கி செல்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்த போது இருந்த கலைஞர் ஞாபகத்திற்கு வருகிறார். கலைஞருடன் இருப்பது போலவே ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது. அதை இன்றைய தொழில்நுட்பம் செய்துள்ளது. 2 வருடங்கள் கலைஞரை ஸ்டடி பண்ண வேண்டி இருந்தது. கலைஞரின் வாழ்க்கையின் பயணத்தை என்னால் உணர முடிந்தது. இப்படி நான் இன்று பேசுகிறேன் என்றால் இப்படிப்பட்ட மனிதரை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உடனிருந்து ஸ்டடி செய்ததுதான் அதற்கு காரணம். சாதி அரசியலை பேசுகிறேன் என்கிறார்கள். கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் வரை எவரும் இங்கு வாலாட்ட முடியவில்லை. ஒரு நூற்றாண்டில் கலைஞரை கொண்டாடி வருகிறோம்.
கலைஞர் இல்லை என்றால் இன்று நான் ஐஏஎஸ் ஆபிஸராக ஆகியிருக்க மாட்டேன் என்று ஒரு அதிகாரி சொல்கிறார். கலைஞருடன் நிறைய அனுபவங்கள் உள்ளது. கலைஞருக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் அவர் கொள்கைகளை சிந்தனையையும் உயிரோடு இருக்கிறது என்றால் நன்றி. இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.. இன்னும் முன்னேறும். கலைஞரின் விதை தமிழ்நாட்டின் மக்களுக்குள் உள்ளது. அது தான் இந்த மண் அழகாக உள்ளது, ஒரு போராளியின் நிலமாக உள்ளது.
நிறைய சூட்டிங் பார்க்க மக்கள் வருவார்கள், ஆனால் கன்னியாகுமரி சூட்டிங்கிர்க்கு அவரே ஆடியன்ஸைக் கூட்டி செல்கிறார் தற்போதைய காலகட்டத்திற்கு கலைஞர் ஒருவரே போதும், அவரால் எத்தனை பேர் உயர்த்தப்பட்டார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும். அந்த கணக்கில் நாம் கலைஞரை பார்க்க வேண்டும். ஜூன் 4 முடிவு தோல்விக்கான அனைத்து வேலையும் மோடி செய்து விட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு நிறைய விஷயங்களை செய்து வருகிறார், வளர்ச்சி தெரிகிறது, யாரையும் எதிர்த்து பேச வேண்டிய துணிச்சல் இருக்கிறது, அது தான் தமிழ் நாட்டின் குரல் அடையாளம். ஒரு முதல்வரை அப்படி நிக்கும் பொழுது மக்களுக்கு நம்பிக்கை வருகிறது. ஸ்டாலின், ஆட்சியை நான் பாராட்டுகிறேன். எனக்கு தமிழ்நாட்டில் வீடு உள்ளது என்று நம்பிக்கை வருகிறது. அவனால் இங்கிருந்து நுழைய முடியவில்லை, என் செல்லத்தை ஒன்னும் செய்ய முடியாதுல்ல நாடு அப்படி இருக்கு. 4 ஆம் தேதிக்கு பிறகு மோடியும் சும்மாதான் இருப்பார் அவரையும் இங்கே இந்த கண்காட்சியை பார்க்க அழைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.