இந்தியா கூட்டணியின் பிரதமர் குறித்து 24 மணிநேரத்தில் அறிவிப்பு: ப.சிதம்பரம்!

இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் என்பது பற்றி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 57 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதாவது இந்த வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் இன்று நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை அறிய மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். என்டிஏ கூட்டணி சார்பில் மோடிதான் மீண்டும் பிரதமராக வருவார் என்று முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒருவேளை அதிக இடங்களில் வென்றால், பிரதமர் யார் என்பது பற்றி விளக்கப்படவில்லை.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஒரு பேட்டியில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது:-

நான் ஆன்மிகவாதி இல்லை. கடவுளை நம்புகின்றவன். தியானம் செய்கின்ற அளவுக்கு எனக்கு ஆன்மிக முதிர்ச்சி இல்லை. தியானம் செய்ய விரும்புகின்றவர்கள் தாராளமாகச் செய்யலாம். அது பற்றி எங்களுக்கு விமர்சனம் இல்லை. ஆனால், கேமிராவுக்கு முன்னால் அதை ஏன் செய்ய வேண்டும்? அதுதான் எங்கள் கேள்வி.

எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் அந்த மாநிலத்தை நம்பர் 1 ஆக்குவேன் என்று பேசுகிறார் மோடி. அதை எப்படி ஆக்க முடியும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் நம்பர் 1 ஆக மாற்றினால், எப்படி தரவரிசை போடுவது? ஒன்று, இரண்டு, மூன்று என்றுதானே தரவரிசை போட முடியும்? அனைத்தையும் நம்பர் 1 என்றால் அது எப்படி? வளர்ச்சி மிகுந்த மாநிலத்தை இன்னும் வளர்ச்சி காணச் செய்வோம் என்று சொல்லலாம். வளர்ச்சி குறைந்த மாநிலத்திற்குக் கூடுதல் நிதி அளித்து உயர்த்துவோம் என்று சொல்லலாம். அவர் அனைத்தையும் நம்பர் 1 ஆக்குவேன் என்கிறார். அதுதான் குழப்பமாக இருக்கிறது.

ஏப்ரல் 20 வரை பிரதமர் மோடி ஒருமாதிரி பேசினார். 21க்குப் பிறகு அப்படியே அனைத்தையும் மாற்றிப் பேசினார். ராமர் கோயிலை இடித்துவிடுவார்கள் என்றார். இரண்டு மாட்டில் ஒன்றைப் பிடுங்கிக் கொள்வார்கள் என்றார். தாலியைப் பறிப்பார்கள் என்றார். எங்கள் தேர்தல் அறிக்கையில் இல்லாததை எல்லாம் பிரதமர் மோடி சொன்னார். முஸ்லிம் லீக் கட்சியின் சாயல் எங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளது என்றார். முதலில் முஸ்லிம் லீக் கட்சியின் வரலாறே மோடிக்குத் தெரியவில்லை. முஸ்லிம் லீக் இந்தியச் சுதந்திரத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி. அது இந்து மகா சபையுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்தது என்பது வரலாறு. முஸ்லிம் லீக் தீண்டத் தகாத கட்சி இல்லை. இந்தக் கட்சி இந்திய அரசியலமைப்பு சட்டங்களுக்குக் கட்டுப்பட்ட கட்சி. மோடி ஏதேதோ பேசுகிறார்.

இந்திய கிரிக்கெட்டில் எத்தனையோ முஸ்லிம்கள் பங்களிப்பு செய்துள்ளார்கள். ராணுவத்தில் செய்துள்ளார்கள். பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்கள் பலர் முஸ்லிம்கள்தானே? அவர்கள் எல்லாம் பிரதமர் பேச்சைக் கேட்டால் புண்பட மாட்டார்களா? இவர்கள் அனைவரும் இந்தியர்கள் இல்லையா? 400 தொகுதிகளை பாஜக பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. வேண்டும் என்றால், 5 நாள் டெஸ்ட் போட்டியில் வேண்டும் என்றால் 400 அடிக்கலாம். அது நடக்காத காரியம். காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நல்ல வெற்றியைப் பெறும். கேரளாவிலும் தெலுங்கானாவிலும் நல்ல வெற்றி கிடைக்கும். ஆந்திராவில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு. கர்நாடகாவில் அதிகம் என்றே சொல்வேன். வடநாட்டில் நிலைமை என்னவென்று எனக்குத் தெரியாது. அங்கே போய் களப்பணி செய்தால்தான் சொல்ல முடியும். பத்திரிகைகளைப் படித்து விட்டு அதை வைத்து சிலர் விவாதிக்கிறார்கள். அப்படி என்னால் சொல்ல முடியாது. ஆனால், வடமாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசி வருகிறார்கள். அங்கே நல்ல சூழல் காங்கிரஸ் கட்சிக்கு நிலவுவதாகக் கணித்துச் சொல்லி இருக்கிறார்கள்.அதை நான் நம்புகிறேன்.

இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், 24 மணிநேரத்திற்குள் பிரதமர் யார் என்பதை நாங்கள் சொல்லிவிடுவோம். அதில் ஒரு சிக்கலும் இருக்காது. இந்தியாவில் ஒருவர் மட்டும்தான் பிரதமராக வரமுடியும். அவருக்கு மட்டும்தான் தகுதி உள்ளது என்று சொல்வதே இந்திய மக்களை அவமானப்படுத்தும் செயல். இந்த நாட்டில் பல பிரதமர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் நல்ல ஆட்சியைத் தந்துள்ளார்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.