இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். 295 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று பேசினார்.
லோக்சபா தேர்தல் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மத்தியில் 3 வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் கூட்டணியை அமைத்து தீவிர பிரசாரம் செய்தனர். பாஜக பிரசாரத்தில் மோடி, அமித்ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜேபி நட்டா உள்ளிட்டோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். பாஜக கூட்டணி இந்த லோக்சபா தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பி வருகின்றனர். இதேபோல் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இன்று டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், திமுகவின் டி ஆர் பாலு உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தலை எதிர்கொண்ட விதம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்தும் விவாதம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை கூட்டம் முடிவடைந்த பின்னர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்றும், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார். செய்தியாளர்களை சந்திப்பின் போது மல்லிகார்ஜூன கூறியதாவது:-
இந்தியா கூட்டணி குறைந்தபட்சம் 295 இடங்களில் வெற்றி பெறும். நிச்சயமாக மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் ஊடகங்கள் உண்மையை சொல்ல வேண்டும். பாஜக ஆட்சி அமைப்பது சிரமம் என அரசு நிறுவனங்கள் கூட கணித்து கூறியுள்ளன. இதேபோல் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பான விவாதங்களில் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்க மாட்டார்கள் என்றும், ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு இது தொடர்பான விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று காங்கிரஸ் கூறியிருந்தது. இந்த நிலையில், இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன்கெரா தனது எக்ஸ் பக்கத்தில், “இண்டியா கூட்டணி கட்சிகள் கூடி, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜகவை அம்பலப்படுத்த முடிவு செய்துள்ளன. கருத்துக் கணிப்பு விவாதத்தில் பங்கேற்கும் சாதக, பாதகங்களை கருத்தில் கொண்டு அனைத்து இண்டியா கூட்டணிக் கட்சிகளும் கருத்துக் கணிப்புக்கு பிந்தைய விவாதத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
கூட்டத்துக்கு முன்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “போட்டி இன்னும் முடிவடையவில்லை. அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கிறார்கள். இந்த 2024 மக்களவைத் தேர்தலில் நாங்கள் எங்கள் முழு பலத்துடன் போராடினோம், இந்திய மக்கள் எங்களை ஆதரித்தது போல நேர்மையான முடிவுகள் வரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.