இஸ்ரேல் நாட்டிலிருந்து இயங்கும் நிறுவனம் ஒன்று இந்திய மக்களவை தேர்தலை சீர்குலைக்க முயன்றதாக ஓபன் ஏஐ நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரிய பொதுத் தேர்தல்களை சீர்குலைக்க சீனா சதி செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு எச்சரிக்கை விடுத்திருந்தது.
அந்த வகையில், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், தற்போது இஸ்ரேலைச் சேர்ந்த ஸ்டாய்க் (STOIC) என்ற அரசியல் பிரச்சார மேலாண்மை நிறுவனம் ஒன்று இந்திய பொதுத் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் பாஜகவுக்கு எதிராகவும், எதிர்கட்சியான காங்கிரஸை பாராட்டியும் கருத்துகளை சமூக வலைதளங்களில் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் பரப்ப முயன்றதாக ஓபன் ஏஐ நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுபோன்ற கருத்துகளின் மூலம் பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை ஏமாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலில் இருந்து இயங்கும் ஏராளமான சமூக வலைதள கணக்குகள், இந்த ரகசிய நடவடிக்கைகளுக்கான உள்ளடக்கங்களை உருவாக்கியும், எடிட் செய்தும் வந்தது அம்பலமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கங்கள் எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
இந்த முயற்சிகள் மே மாத தொடக்கத்தில் இருந்து பார்வையாளர்களை குறிவைத்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ”சில அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்படும், வெளிநாட்டு தலையீடுகள், போலியான தகவல்கள் போன்வற்றுக்கு பாஜக எப்போதுமே வெளிப்படையான இலக்காக இருந்து வருகிறது. இது நாட்டின் ஜனநாயகத்துக்கு மிக ஆபத்தான அச்சுறுத்தல்” என்று தெரிவித்துள்ளார்.