சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் பிடிபட்டார். சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் உள்ளதால் போலீஸார் அவரை அனுப்பி வைத்தனர்.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வைத்துள்ளேன்’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து ஆளுநர் மாளிகையில் சோதனை நடத்தப்பட்டது. பல மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்து எந்த வெடிபொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த தொலைபேசி மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து சைபர் க்ரைம் போலீஸார் கள்ளக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், தேவேந்திரனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ‘அவர் சென்னை பல்கலை.யில் வரலாறு பாடப்பிரிவு படித்துள்ளார் என்பதும், பின்னர், 4 ஆண்டுகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்துள்ளதும், அப்போது நடந்த விபத்து ஒன்றுக்கு பிறகு சொந்த மாவட்டம் சென்றது தெரியவந்தது. விபத்தில் சிக்கியதன் காரணமாக, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் உள்ளார். இதையடுத்து போலீஸார் அவரை விடுவித்து சிகிச்சை அளிக்குமாறு பெற்றோரை அறிவுறுத்தி விட்டு சென்றனர்.