கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் கடந்த மூன்று நாட்களாக தியானம் செய்து வந்த பிரதமர் நரேந்திர மோடி தியானத்தை நிறைவு செய்த பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு சென்று அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு, இன்று நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு நேற்று முன்தினம் (மே 30) வருகை புரிந்தார். கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொண்டு வந்தார் பிரதமர் மோடி. இன்று தனது மூன்றாவது நாள் தியானத்தை நிறைவு செய்தார். மூன்றாம் நாள் தியானம் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் நிறைவடைந்தது. பின்னர் விவேகானந்தர் மண்டப ஊழியர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வந்த மோடி, தனக்காக ஒதுக்கப்பட்ட ‘விவேகானந்தா’ என்ற படகு மூலம் திருவள்ளுவர் சிலையை அடைந்தார். அங்கு திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். கடலுக்கு நடுவே பிரமாண்டமாக எழுந்து நிற்கும் திருவள்ளுவரை வியப்புடன் பார்த்துள்ளார் பிரதமர் மோடி. அங்கு எழுதப்பட்டிருந்த திருக்குறளை அருகில் இருந்த அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டு தெரிந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதைத்தொடர்ந்து, படகில் கரைக்கு வந்து, அங்கிருந்து கான்வாயில் ஹெலிபேட் தளம் நோக்கி புறப்பட்டார். அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். இன்று மாலை 6 மணி உடன் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி டெல்லி செல்கிறார்.
பிரதமர் மோடியின் தியானத்தை முன்னிட்டு, கன்னியாகுமரியில் வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் இன்றும் தொடர்ந்தன. கன்னியாகுமரி கடலில் 3 நாட்டிக்கல் மைல் தூரம் வரை மீன்பிடிபடகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், கன்னியாகுமரி பகுதியில் மட்டும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆதார் அட்டை இருக்கும் சுற்றுலா பயணிகள் மட்டும் விவேகானந்தர் பாறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பிரதமர் தியானம் செய்யும் தியான மண்டபம் பகுதிக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.