அருணாச்சல், சிக்கிமில் பேரவைகளின் பதவிக்காலம் இன்றுடன்(ஜூன் 2) நிறைவடைவதால், முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலுடன், பேரவைத் தேர்தல் நடைபெற்ற அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் வாக்கு எண்ணும் பணி இன்று(ஜூன் 2) காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல்வர் பீமா காண்டு, துணை முதல்வர் சௌனா மெயின் உள்பட 10 பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் பவன் குமார் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், மீதமுள்ள 50 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. பேரவைத் தேர்தல்கள் நடைபெற்ற ஆந்திரம் மற்றும் ஒடிஸா மாநிலங்களுடன் சேர்த்து ஜூன் 4ஆம் தேதியே எண்ணப்படுவதாக இருந்த நிலையில், அருணாச்சலம் மற்றும் சிக்கிமில் மட்டும் ஜூன் 2ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது. காரணம், இரண்டு பேரவைகளின் பதவிக்காலமும் ஜூன் 2ஆம் தேதியே நிறைவு பெறுகிறது என்பதால், ஓரிரு நாள்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை இல்லாத சூழ்நிலை ஏற்படலாம் என்பதை தவிர்க்கவே வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடையும்போது, தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும் என்பதால் முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலுடன் பேரவைத் தேர்தல் நடைபெற்ற ஆந்திரம் மற்றும் ஒடிசா பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியே நடைபெறவிருக்கிறது.