இளையராஜவுக்கு ‘பாரத ரத்னா’ விருதை வழங்க வேண்டும்: அன்புமணி!

இசைஞானி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் உலகம் முழுவதிலும் இருக்கும் இசை ரசிகர்கள், அரசியல், திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதை வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்திருக்கிறது.

இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராகத் திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. இசை ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அவருக்கு இசைத்துறை சாதனைக்காக நாட்டின் உயரியவிருதுகளான பத்மவிபூஷன் மற்றும் பத்மபூஷன் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளன. இவர் இதுவரை இரண்டு தமிழ், இரண்டு தெலுங்கு, ஒரு மலையாளம் என மொத்தம் ஐந்து படங்களுக்காக தேசிய விருதை வென்றுள்ளார். இதுதவிர தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மத்திய பிரதேச அரசின் பல விருதுகளையும், இரண்டு கெளரவ டாக்டர் பட்டங்களையும் வென்றுள்ளார் இளையராஜா.

அது மட்டுமல்லாமல் பாஜகவால் மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்ட இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். இவரது வாரிசுகளான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரணி ஆகியோரும் இசைத்துறையில் சாதனை படைத்தவர்கள் தான். கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவால் பவதாரணி உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினர் சோகக் கடலில் மூழ்கினர்.

இந்நிலையில் பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும் இசைஞானி என்றே ரசிகர்கள் அவரை அழைத்து வருகின்றனர். அவர் இன்று தனது 81ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல், தனுஷ் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சென்னையில் தனது ரசிகர்களை அலுவலகத்தில் சந்தித்தார் இளையராஜா. தனது பிறந்தநாள் என்றாலும் மகளை இழந்த துக்கத்தில் இருப்பதால் பிறந்த நாளை கொண்டாடவில்லை எல்லாம் உங்களுக்காக தான் என அவர் கூறியபோது ரசிகர்கள் கண்கலங்கி போயினர்.

இந்நிலையில் இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவரான அன்புமணி ராமதாஸ். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழ் மக்கள் மற்றும் இசை ரசிகர்களின் செவிகளில் நுழைந்து இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு அவரது 82-ஆம் பிறந்தநாளையொட்டி, எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசைச்சக்கரவர்த்தியான அவர் நூற்றாண்டு காண பிரார்த்திக்கிறேன்! கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழ்ச் சமூகத்திற்கு இசை சேவை செய்து வரும் இளையராஜா, அகவை 80-ஐக் கடந்து சேவை செய்வதை நிறுத்திக் கொள்ளவில்லை.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த அவர், அடுத்து அமைத்திருக்கும் சிம்பொனி இசையை கேட்டு மயங்க இசை ரசிகர்களுடன் இணைந்து நானும் காத்திருக்கிறேன். இளையராஜா சமூகத்திற்கு செய்த பணிகளுக்கு இணையான அங்கீகாரத்தை அவருக்கு நாம் வழங்கவில்லை என்ற குறை எப்போதும் எனக்கு உண்டு. இந்தியாவின் மிக உயர்ந்த பாரதரத்னா விருது உள்ளிட்ட அனைத்து அங்கீகாரங்களும் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.