தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில் முதல் கட்ட தேர்தலிலேயே தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிவடைந்தது. தற்போது லோக்சபா தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள சூழலில், நாளை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான அக்பர் அலி, அருணா ஜெகதீசன், அரிபரந்தாமன், சிவக்குமார், செல்வம், எஸ்.விமலா உள்ளிட்ட 7 நீதிபதிகள் கூட்டாக குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
நாட்டில் நடந்து முடிந்துள்ள தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்திய விதம் குறித்து மக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தி நிலவுகிறது. புகார்கள் குறித்து கவனத்திற்கு கொண்டு வந்த போதும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும், தேர்தல் ஆணையம் தனது கடமையை செய்யவில்லை.
தேர்தலில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சு இருந்தது. ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வியடைந்தால் ஆட்சி மாற்றம் என்பது சுமூகமாக இருககது. பாஜக தோற்றால் அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்கக் கூடும். வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் விபரீத சூழல் ஏற்பட்டால், உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும். சிக்கல் எழுந்தால் அதனை சரி செய்வதற்கு 5 நீதிபதிகள் நீதிமன்றத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குதிரைபேரம் உள்ளிட்ட அரசமைப்பு எதிரான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால், அரசமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேர்தலுக்கு முந்தைய கூட்டணியையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை எவ்வித பிரச்சனைகளும் ஏற்பட விடாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.