பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு என் உயரம் எனக்குத் தெரியும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
மோடிக்கு எதிர்ப்பு அலை பல்வேறு மாநிலங்களில் உள்ளது. அதுபோல தமிழகத்தில் அவருக்கு எதிர்ப்பு அலை இருக்கிறது என்பதற்கு இந்த வெற்றியே எடுத்துக்காட்டு என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகிவிரும் நிலையில் தமிழகத்தில் திமுக 3 வெற்றி, 37 தொகுதிகளில் முன்னிலை என 40க்கு 40 இடங்களை தக்க வைக்கிறது. இந்த நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த முறை 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த முறை 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம்.
400 இடங்கள் என்று கூறிய பாஜகவுக்கு ஆட்சியமைக்கப் போதுமான தொகுதிகள் கிடைக்கவில்லை. பாஜகவின் பண பலம் எடுபடவில்லை. பாஜகவின் கனவு பலிக்கவில்லை. திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காக்கத் தேவையான அரசியல் செயல்பாடுகளை திமுக தொடர்ந்து முன்னெடுக்கும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது. மக்களவைத் தேர்தல் வெற்றியை அவருக்கு காணிக்கையாக்குவோம் என்று சொல்லியிருந்தோம். இந்த மகத்தான வெற்றியை அவருக்கு காணிக்கையாக்குகிறோம் என்று தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
மேலும், செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு என் உயரம் எனக்குத் தெரியும் என்றும் அவர் பதிலளித்தார்.