“ஆந்திரப் பிரதேச மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகள். தங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் வளர்ச்சியையும் தந்து, அம்மாநில மக்களின் கனவுகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றட்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில், ‘ஆந்திரப் பிரதேச மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகள்! தங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் வளர்ச்சியையும் தந்து, அம்மாநில மக்களின் கனவுகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றட்டும்!” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தின் அரியணையை உறுதிப்படுத்தியுள்ளது தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா கூட்டணி. 175 சட்டப்பேரவை தொகுதிகளில் இக்கூட்டணி 154 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் 130 தொகுதிகளிலும், ஜனசேனா 20 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. அதேநேரம், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை சந்தித்து வருகிறது.