தென்காசி (தனி) லோக்சபா தொகுதியில் 6 முறை தோல்வியடைந்த டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிட்டுள்ளார். தற்போது அவர் தோல்வி முகத்தில் உள்ளார். அதேபோல் பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் 3வது இடத்தில் உள்ள நிலையில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலையில் உள்ளார்.
தென்காசி தொகுதியில் தற்போது சிட்டிங் எம்பியாக தனுஷ் குமார் உள்ளார். இந்த முறை இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். பாஜக சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தாமரை சின்னத்தில் களமிறங்கி உள்ளார். நாம் தமிழர் சார்பில் இசைமதிவாணன் போட்டியிட்டுள்ளார். தேவேந்திர குல வேளாளர் பிரிவு மக்களின் தலைவராக அறியப்படும் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோர் எதிரெதிர் துருவமாக களமிறங்கி உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி தொகுதிக்கு கடந்த 1957 முதல் 2019 வரை மொத்தம் 16 லோக்சபா தேர்தல்கள் நடந்துள்ளன. 1957 முதல் 1996-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 10 முறை காங்கிரஸ் வென்றது. அதன்பிறகு அதிமுக 3 முறை, சிபிஐ 2 முறை, திமுக ஒரு முறை வென்றுள்ளது. இந்நிலையில் தான் 2வது முறையாக திமுக வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்த தொகுதியில் கிருஷ்ணசாமி 6 முறை போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் 7 வது முறையாக களமிறங்கி உள்ளார். அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது பிளஸ் பாயிண்ட். அதேவேளையில் பாஜகவின் தாமரை சின்னத்தில் ஜான் பாண்டியன் போட்டியிட்டுள்ளார். கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோர் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க தலைவர்கள். இவர்கள் 2 பேரும் ஓட்டை பிரிக்க வாய்ப்புள்ளது. இது அவர்கள் 2 பேருக்கும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.
நாம் தமிழர் வேட்பாளர் இசை மதிவாணன் கணிசமான ஓட்டை பெற்றாலும் கூட வெல்வது கடினம். இதனால் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வெல்லவே இந்த தொகுதியில் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்தது. தபால் ஓட்டின் தொடக்கத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். அவர் பாஜகவின் ஜான் பாண்டியன், அதிமுகவின் ராணி ஸ்ரீகுமார் ஆகியோரை அவர் பின்னுக்கு தள்ளினார். அதன்பிறகு நிலைமை மாற தொடங்கியது. தென்காசி லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை வகிக்க தொடங்கினார். இதையடுத்து ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டு எண்ணும் பணி தொடங்கி நடந்து வருகிறது. காலை 11 மணியளவில் தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 54,004 ஓட்டுகள் பெற்றுள்ளார். அதிமுக சார்பில் புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி 30,277 வாக்குகளை பெற்றார். பாஜக சார்பில் வேட்பாளர் கிருஷ்ணசாமி 25,571 ஓட்டுகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் இசை மதிவாணன் 17,736 வாக்குகளை பெற்று 4வது இடத்தில் இருந்தார்.
அதன்பிறகு மதியம் 12.30 மணியளவில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 1 லட்சத்து 18 ஆயிரம் ஓட்டுகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 62,213 ஓட்டுகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 54,504 ஓட்டுகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் மதிவாணன் 34,539 ஓட்டுகள் பெற்று 4வது இடத்தில் இருக்கிறார்.
மதியம் 2.30 மணியளவில் தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி தோல்வி முகத்தில் உள்ளார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ராணி ஸ்ரீகுமார் 1,87,124 ஓட்டுகளுடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 91,892 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 86,961 வாக்குகளுடன் 3வது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் இசை மதிவாணன் 49,014 வாக்குகளுடன் 4வது இடத்தில் இருக்கிறார்.