கேரளாவில் முதல்முறையாக பாஜக சுரேஷ் கோபி பெரும் வெற்றி!

கேரளாவில் முதல்முறையாக தனது கணக்கை தொடங்கியுள்ளது பாஜக. சுரேஷ் கோபி திருச்சூரில் வெற்றி பெற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர் கடும் போட்டி அளித்து வருகிறார். கேரளாவில் கம்யூனிஸ்டுகள் இந்த தேர்தலில் அங்கு கடுமையாக வீழ்ந்துள்ள நிலையில் பாஜகவின் எழுச்சி மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

படித்தவர்கள் அதிகம் உள்ள கேரளாவில் கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டியே நடக்கும். ஒன்று கம்யூனிஸ்டுகள் ஜெயிப்பார்கள்.. இல்லாவிட்டால் காங்கிரஸ் ஜெயிக்கும். இதுதான் இன்று வரை உள்ள நடைமுறையாகும். கடந்த 2019 லோக்சபா தேர்தலில், சிபிஐ(எம்) 1 இடத்திலும், காங்கிரஸ் 15 இடத்திலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 1 இடத்திலும், கேரள காங்கிரஸ் (எம்) 1 இடத்திலும், ஐயுஎம்எல் 2 இடத்திலும் வெற்றி பெற்றன. கேரளாவில் ஆலப்புழா, ஆலத்தூர், அட்டிங்கல், சாலக்குடி, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கொல்லம், கோட்டயம், கோழிக்கோடு, மலப்புரம், மாவேலிக்கரா, பாலக்காடு, பத்தனம்திட்டா, பொன்னானி , திருவனந்தபுரம், திருச்சூர், வடகரா, வயநாடு ஆகிய 20 தொகுதிகள் உள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 18 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் காங்கிரஸ் மட்டும் 13 இடங்களிலும், ஐயுஎம்எல் கட்சி இரண்டு இடங்களிலும், கேரளா காங்கிரஸ் ஒரு இடத்திலும், ஆர்எஸ்பி கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. அதேநேரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் ஆணையம் வெளியிட்ட கடைசி அறிவிப்பின் படி, பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி 396881 வாக்குகளும், கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில் குமார் 323761 வாக்குகளும், காங்கிரஸ் கட்சியின் முரளிதரன் 315546 வாக்குகளும் பெற்றிருந்தனர். வெற்றி வாக்கு வித்தியாசம் எவ்வளவு என்பதை இதுவரை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இதில் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராஜீவ் சந்திரசேகர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பண்ணயன் ரவீந்திரன் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் சசி தரூர் ஆகியோர் போட்டியில் உள்ளனர். இங்கு ராஜீவ் சந்திரசேகர் 287094 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார்.. இவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் 286665 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அதாவது சசிதரூரைவிட பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் 429 வாக்குகளுடன் முன்னிலையில் இருந்தார்.. சசி தரூர் தற்போது முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதேபோல் மற்றொரு முக்கிய விஐபி தொகுதியான வயநாட்டில் காங்கிரஸ் நட்சத்திர தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி ராஜாவின் மனைவியான ஆனி ராஜா போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அம்மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிட்டுள்ளார். இங்கு ராகுல் காந்தி 558767 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட டி ராஜாவின் மனைவியான ஆனி ராஜா 250953 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதன் மூலம் ராகுல் காந்தி 307814 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இந்த முன்னிலை நிலவரம் மூலம் ராகுல் காந்தி வெற்றி உறுதியாகி உள்ளது. வெற்றி வித்தியாசம் தான் மாறும் என்று தெரிகிறது. அதேநேரம் கம்யூனிஸ்டுகள் தனது கோட்டையிலேயே கடுமையாக வீழ்ந்துள்ளனர். வெறும் ஒரு தொகுதியில் தான் முன்னிலை வகிக்கிறார்கள். அலத்தூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் 21542 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் 35 சதவீதம் வாக்குகளுடன் 18 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24.52 சதவீதம் வாக்குகள் வாங்கியும் ஒரு இடத்தில் தான் முன்னிலை வகிக்கிறது. பாஜக 16.25 சதவீதம் வாக்குகளுடன் ஒரு இடத்தில் வெற்றி மற்றும் ஒரு இடத்தில் முன்னிலை(மாறி மாறி வருகிறது) வகிக்கிறது.. பாஜகவின் வாக்கு சதவீதம் கடுமையாக அதிகரித்திருப்பது கம்யூனிஸ்டுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.