ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவர் கிட்டத்தட்ட 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர்கள் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்த மக்களவைத் தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதற்கான வாக்குப் பதிவு எண்ணிக்கை இன்று எண்ணப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளில் பாஜக 236 இடங்களில் முன்னிலை வகித்து வருவதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே போல் 2 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சி மொத்தம் என்டிடிவி நிலவரப்படி 98 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதாவது பஞ்சாபில் போட்டியிட்ட காங் வேட்பாளர் சரஞ்சித் சிங் சன்னி சுமார் 390053 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நாடு முழுவதும் காங் கட்சி கிட்டத்தட்ட 100 தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தாலும், பஞ்சாப் மாநிலத்தில் தான் முதன் முதலாக வெற்றியைப் பதிவு செய்துள்ளார். கடந்த 2019இல் வெறும் 91 தொகுதிகளில்தான் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை நிலைமை தலைகீழாக மாறியுள்ளது என்றே தெரிகிறது. அதாவது காங் தலைமையிலான இந்தியா கூட்டணி என்டிடிவி தகவலின்படி 233 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது இந்தக் கூட்டணி.
கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவும் மோடியும் மிகக் கடுமையாக ராகுல் காந்தியை விமர்சித்தே வந்தார்கள். இன்னும் சொல்லப் போனால் ‘துக்டே துக்டே’ என்று சிறுமைப்படுத்தும் நோக்கில் பேசி வந்தனர். அவர் வயநாடு தொகுதியில் எம்பி இருந்ததை எப்படியாவது முடக்க வேண்டும் என்ற முயற்சிகளையும் மறைமுகமாக பாஜக எடுத்து வந்தது என்று முன்பு ஒரு குற்றச்சாட்டும்கூட முன்வைக்கப்பட்டது. அதன்பின்னர் ராகுல் சட்டப்படி போராடி தனது வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீட்டு எடுத்தார். இந்தத் தேர்தலில் கூட, ராகுல் அமேதியில் தோல்வியைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் அவர் வயநாடுக்கு போய்விட்டார் என்றும் அமேதியில் நிற்காமல் ரேபரேலிக்குப் போய்விட்டார் என்றும் பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். ஆனால், இன்று தேர்தல் நிலவரங்கள் வெளியாகி வரும் சூழலில் ராகுல் காந்தி ரேபரேலியிலும் வயநாடு தொகுதியிலும் ராகுல் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.
வயநாடு தொகுதியில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 608497 ஓட்டுகளைப் பெற்றுள்ளார். அதாவது 340241 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அனி ராஜா 268256 வாக்குகளைப் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். இதே தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுரேந்திரன் 135947 வாக்குகளைப் பெற்றுக் கிட்டத்தட்ட ராகுலைவிட 472550 ஓட்டுகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இந்த மாநிலத்தில் ராகுலைத் தோற்கடிக்க பாஜக பல்வேறு யுக்திகளைக் கையாண்டது. அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சியும் கடுமையாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இதேபோல ராகுல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். அங்கே அவர் 557005 லட்சம் வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து களம் கண்டுள்ள பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் 250261 ஓட்டுகளைப் பெற்று பின் தங்கி இருக்கிறார். அதாவது இவர் ராகுல் காந்தியைவிட 306744 வாக்குகள் என்ற அளவில் பாஜக வேட்பாளர் பின் தங்கி இருப்பதாகத் தேர்தல் ஆணையமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது மட்டும் அல்ல, காங்கிரஸ் கட்சி இந்த முறை உபியிலும் கேரளாவிலும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்ய உள்ளது. அதுவும் பாஜகவின் கோட்டையான உபியை ராகுல் அகிலேஷ் யாதவ் கூட்டணி உடைத்துக் காட்டி உள்ளது. அங்கே சமாஜ்வாதி கட்சி 35 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 34 தொகுதிகளுக்குச் சுருண்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. கேரளாவில் உள்ள மொத்தம் 20 தொகுதிகளில் காங்கிரஸ் 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்தளவுக்கு ராகுல் காந்தியின் உழைப்பால் காங்கிரஸ் கட்சி கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் இழந்த வெற்றிவாய்ப்பை இம்முறை மீட்டுக் கொண்டு வந்துள்ளது.