தென்சென்னை தொகுதியில் வாக்கு எண்ணும் போது 5 இவிஎம் இயந்திரங்கள் கோளாறு ஆனதால் அதனை சரி பார்க்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தென் சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாவது இடத்தில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனும், அடுத்தடுத்து இடங்களில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் உள்ளனர்.
இந்நிலையில், தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை தேர்தல் அலுவலர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது 4 இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தேர்தல் அலுவலர்கள் இயந்திரங்களை பழுது பார்க்கும் பொறியாளர்களை வரவழைத்து இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் தி.நகர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்கு இயந்திரத்தில், பதிவான வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் ஏற்பட்டதையடுத்து அந்த இயந்திரத்தை ஓரம் கட்டிய அலுவலர்கள் அதனையும் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தென்சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கூறுகையில், “தற்போது கோளாறு ஏற்பட்ட 5 இவிஎம் இயந்திரங்களையும் சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள நான்கு இயந்திரங்களில் இரண்டு இயந்திரங்களை உடனடியாக ஊழியர்கள் சரி செய்து விடலாம் என தெரிவித்துள்ளனர். அதேசமயம் மீதமுள்ள இரண்டு இயந்திரங்களை சரி செய்ய முடியவில்லை என்றால், முன்னிலையில் உள்ள வேட்பாளர் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கும் பட்சத்தில் அந்த 2 இவிஎம் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டிய அவசியம் ஏற்படாது.
முன்னிலையில் உள்ள வேட்பாளர் வெற்றி என அறிவிக்கப்படும். மேலும், திநகர் சட்டப்பேரவை தொகுதி வாக்கு இயந்திரத்தையும் சரி செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். தேவைப்பட்டால் இறுதியில், ஒப்புகை சீட்டு வைத்து அந்த இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கையின் முடிவு அறிவிக்கப்படும்” என்றார்.