ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் நிலையில், ஆந்திரா முதல்வராக வரும் ஜூன் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார்.
லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல் பிரதேசம் சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றன. நமது அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டன. இன்று லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், ஆந்திரா சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படுகிறது. ஆந்திராவைப் பொறுத்தவரை அங்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அவருக்கு எதிராக சந்திரபாபு நாயுடு களமிறங்குகிறார். பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து சந்திரபாபு நாயுடு களமிறங்குகிறார். இதற்கிடையே இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பாலான தொகுதிகளில் சந்திரபாபு நாயுடு கட்சி முன்னிலையில் இருக்கிறது. ஆந்திர மாநிலச் சட்டசபைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக அம்மாநில முதல்வராகப் பதவியேற்க உள்ளார். ஏற்கனவே அங்கு இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அங்கு மொத்தம் 175 தொகுதிகள் இருக்கும் நிலையில், சந்திரபாபு நாயுடு கட்சி 130 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. அவரது கூட்டணியில் உள்ள பவன் கல்யாண் கட்சி 20 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், பாஜக 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. தற்போது ஆட்சியில் இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியால் வெறும் 19 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. காலை முதலே இதே டிரெண்ட் தொடர்வதால் தெலுங்கு தேசம் கட்சி ங்கு ஆட்சியைப் பிடிப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. மேலும், ஆந்திராவில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியினர் தங்கள் கட்சியின் வெற்றியைக் கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர்.
இதற்கிடையே ஆந்திரா முதல்வராக நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9இல் அமராவதியில் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடியும் சந்திரபாபு நாயுடுவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்ததற்கு வாழ்த்துக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.