பகுஜன் சமாஜ் கட்சி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதன் தலைவரான மாயாவதி, “உரிய பிரதிநிதித்துவம் வழங்கினாலும் இஸ்லாமியர்கள் எங்கள் நோக்கங்களைப் புரிந்து கொள்ளவில்லை” என்று பேசியுள்ளார்.
தேர்தல் தோல்வி குறித்து மாயாவதி கூறியதாவது:-
இஸ்லாமியர்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய அங்கமாக இருந்துள்ளனர். அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கடந்த தேர்தல்களிலும், இந்த மக்களவைத் தேர்தலிலும் சரியான முறையில் வழங்கப்பட்டது. நடந்து முடிந்த தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு அதிகபட்சமாக 35 தொகுதிகளில் வாய்ப்பு வழங்கினோம். ஆனால், அவர்கள் எங்களின் நோக்கங்களை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இந்த நேரத்தில் கட்சியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு இதுபோன்ற இழப்புகள் ஏற்படாமலிருக்க, இனி வரும் தேர்தல்களில் கட்சி யோசித்தே அவர்களுக்கான வாய்ப்பை வழங்கும். கட்சியின் தோல்வி குறித்து முழுமையாக ஆய்வு செய்து, கட்சியைப் பாதுகாக்க இனி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தனக்கு வாக்களித்த தலித் மக்களுக்கு, குறிப்பாக ஜாதவ் இன மக்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மத்திய அரசு இந்த வெப்பக்காலத்தில் இவ்வளவு நீண்ட தேர்தலை நடத்தி பொதுமக்களையும் அரசு அலுவலர்களையும் சிரமப்படுத்தியதாக விமர்சித்த மாயாவதி, தேர்தலை அதிகபட்சம் 3, 4 கட்டங்களில் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி கூட்டணியில் 10 இடங்களில் வென்றது. ஆனால், இந்த முறை கடந்த 2014 மக்களவைத் தேர்தலைப் போலவே அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது.