தாமரை மலராது என மக்கள் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளனர்: கனிமொழி!

தாமரை மலராது என மக்கள் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளனர் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையும் மொத்தமாக அள்ளியுள்ளது திமுக கூட்டணி. தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி கருணாநிதி போட்டியிட்ட நிலையில் அவர் 3 லட்சத்து 92 ஆயிரத்து 738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அபார வெற்றி பெற்றதை அடுத்து சென்னை வந்த கனிமொழி கருணாநிதி, முன்னாள் முதல்வரும் தனது தந்தையுமான கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் வெற்றிச் சான்றிதழை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி கூறியதாவது:-

கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடிக்கடி என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பார். இரண்டாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக தற்போது அவருக்கு பதில் சொல்கிறேன். இந்த தகுதி கூட இல்லாத ஒரு நபர் பாஜகவிற்கு தலைவராக இங்கே நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல. தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை. தாமரை மலராது என மக்கள் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கனிமொழி பற்றி முன்பு பேசும்போது, “கனிமொழி என்ன உழைத்தார்? அப்பா பெயரை வைத்து வாழ்ந்து வருகிறார். கருணாநிதி என்ற பெயரை தூக்கி விட்டால் கனிமொழி யார்? பிரதமர் பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? கனிமொழி முதலில் கண்ணாடியை பார்த்து பேசிப் பழக வேண்டும். பிரதமர் பற்றி பேச ஒரு தகுதி வேண்டும். அது அரை சதவீதம் கூட கனிமொழிக்கு இல்லை” எனக் கூறி இருந்தார். அதற்குத்தான் இன்று பதிலடி கொடுத்துள்ளார் கனிமொழி.

தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி 5 லட்சத்து 40 ஆயிரத்து 729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைய செய்துள்ளார். தூத்துக்குடி தொகுதியில், அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி உட்பட 27 வேட்பாளர்களின் டெபாசிட் காலியாகியுள்ளது.