குற்றவாளிகள் அனைவரும் ஒரு காரணத்தினைக் கொண்டிருப்பர்: கங்கனா ரனாவத்!

குற்றவாளிகள் அனைவரும் ஒரு காரணத்தினைக் கொண்டிருப்பர் என்று கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

சண்டீகர் விமான நிலையத்தில் தன்னை அறைந்த சிஐஎச்எஃப் காவலரைப் பாராட்டி, பலரும் கருத்து தெரிவித்தது குறித்து கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கங்கனா தனது எக்ஸ் பதிவில், “ஒவ்வொரு பாலியல் துன்புறுத்தல் குற்றவாளி, கொலையாளி, திருடர் என அனைவரும் குற்றத்தைச் செய்ததற்கான உணர்ச்சி, உடல், உளவியல் அல்லது பணம்சார்ந்த காரணங்களைக் கொண்டுள்ளனர். எந்தக் குற்றமும் ஒரு காரணமின்றி நடக்காது. இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். நீங்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்தால், குற்றவாளிகளுக்கு அது ஒரு உந்துதலாக இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் டெல்லி செல்வதற்காக, சண்டீகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு பிறகு, விமானத்தில் ஏறுமிடத்தில் சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் தன்னை அறைந்ததாகக் கூறி, டெல்லி வந்தடைந்த கங்கனா சிஐஎஸ்எஃப் இயக்குநர் ஜெனரல் நினா சிங்கிடம் புகார் அளித்துள்ளார். விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா முன்பு கூறிய கருத்துக்களால் குல்விந்தர் கவுர் அதிருப்தி அடைந்திருந்ததால், அவர் கங்கனா ரணாவத்தை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது போராட்ட களத்தில் உள்ள வயதான பெண்கள் 100 ரூபாயை வாங்கிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக சமூக ஊடகத்தில் கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து அந்தப் பதிவை நீக்கினார். இதுதொடர்பாகத்தான் ரனாவத்துக்கும், பெண் காவலருக்கும் இடையே தற்போது மோதல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெண் காவலர் குல்விந்தர் கவுர் கூறுகையில், “ 100 ரூபாய் வாங்கிக் கொண்டு பெண் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக ரனாவத் கூறுகிறார். என் தாயாரும் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார். விவசாயிகளை இழிவுபடுத்தும் ரனாவத் வந்து அந்த போராட்டத்தை முன்னின்று நடத்துவாரா’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அம்மாவின் மரியாதைக்காக ஆயிரம் வேலைகளையும் இழக்க தயார் என சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலர் குல்விந்தர் கவுர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்த வேலை இழந்ததை நினைத்து நான் பயப்படப்போவதில்லை. எனது அம்மாவின் மரியாதைக்காக ஆயிரம் வேலைகளையும் இழக்க தயார்’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.