அதிமுக விட்டுக் கொடுத்ததால்தான் அண்ணாமலை இவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளார்: ஜோதிமணி!

கோவையில் பாஜகவின் அழுத்தத்திற்கு பயந்து அதிமுக விட்டுக் கொடுத்ததால்தான் அண்ணாமலை இவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளார் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் லோக்சபா தொகுதியில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று, 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை வென்றார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், 2,36,490 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதிமுகவுக்கு எப்போதும் நிலையாக இருந்து வந்த 32 சதவீத வாக்குகள், 17 சதவீதமாக சரிந்துள்ளது. தங்கள் கோட்டையான கோவையை இழந்துள்ளது அதிமுக.

2021 சட்டசபைத் தேர்தலில், அதிமுக – பாஜக கூட்டணி, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் வென்றது. கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தவிர, அனைத்து இடங்களையும் அதிமுக நேரடியாக கைப்பற்றியது. அப்படி இருந்தும் அடுத்த 3 ஆண்டுகளில் கோவையில் 3வது இடம் பிடிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது அதிமுக.

இந்நிலையில் கோவையில் பாஜகவின் அழுத்தத்திற்கு பயந்து அதிமுக களத்தை விட்டுக் கொடுத்ததால்தான் அண்ணாமலை இவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளார் என கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற இருக்கும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கரூர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில், ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த தேர்தலில் பாஜகவும், மோடியும் ஆட்சி அமைக்க கூடாது என்று மக்கள் ஓட்டு போட்டு உள்ளனர். இதனால் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரக் கூடாது. மக்கள் எதிர்த்து ஒட்டு போட்டு உள்ளதால் தார்மீக அடிப்படையில் பதவி ஏற்க கூடாது. இது பாஜக ஆட்சி இல்லை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்று கூறுகின்றனர்.

கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அமைச்சரவையில் இடம் கேட்டு நிர்பந்தம் செய்து வருவதாக தகவல்கள் வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டதால் மக்கள் நம்பிக்கையை பெற்று உள்ளோம். சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம். மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.

கோயம்புத்தூரில் அதிமுகவின் வேலுமணி கூறியதையும் அதற்கான பாஜக அண்ணாமலையின் பதிலையும் பார்த்தேன். இந்த வார்த்தை போரானது ஒரு நாடகம். பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தத்திற்கு பயந்து அதிமுகவும் வேலுமணியும் களத்தை பாஜகவிற்கும் அண்ணாமலைக்கும் விட்டுக் கொடுத்தார்கள். அதிமுக – பாஜக வார்த்தை போர் என்பது நாடகம். பாஜக அழுத்தம் காரணமாக அதிமுகவும், எஸ்பி வேலுமணியும், அண்ணாமலைக்கு விட்டுக் கொடுத்து உள்ளனர். இதை மறைத்து அப்பாவி அதிமுக தொண்டர்களை ஏமாற்ற வேலுமணியும், அண்ணாமலையும் நாடகம் நடத்துகின்றனர். பா.ஜ.க.விற்கு கிடைத்த வாக்கு வங்கி அதிமுகவின் வாக்கு தான். இவ்வாறு அவர் கூறினார்.