திமுக எதிர்ப்பு நிலைப்பாடு அதிமுகவை தனித்து நின்று வெல்லுகிற கட்சியாக உருவாக்கும்: கேசி பழனிசாமி!

ஜெயலலிதா காலத்தை போல கடுமையான பாஜக எதிர்ப்பு நிலைப்பாடும், திமுக எதிர்ப்பு நிலைப்பாடும் தான் அதிமுகவை தனித்து நின்று வெல்லுகிற கட்சியாக உருவாக்கும் என அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கூறியுள்ளார்.

இந்தியாவை கடந்த சில மாதங்களாக சூழ்ந்திருந்த அரசியல் புயல் சற்றே ஒய்ந்திருக்கிறது. பாஜக மக்களவை தேர்தலில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது. ஆனால் கடந்த 2 முறைகளை போல் தற்போது தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு போன்ற கூட்டணி கட்சி தலைவர்களை நம்பியே ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பாஜக. கடந்த காலங்களில் கூட்டணியை நம்பி ஆட்சியை இழந்த பிரதமர்களின் வரலாறும் உண்டு.

இது ஒருபுறம் இருக்க அதிமுக தமிழகத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 2019ஆம் ஆண்டிலிருந்து அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. 2019 மக்களவை தேர்தல், 6 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், ஊராக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு இடைத் தேர்தல், தற்போது மக்களவை தேர்தல் என எடப்பாடி தான் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அக்கட்சியை தோல்வியடையச் செய்திருக்கிறார். இதனால் அவர் மீது ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக எதிர்ப்பு நிலைப்பாடும், திமுக எதிர்ப்பு நிலைப்பாடும் தான் அதிமுகவை தனித்து நின்று வெல்லுகிற கட்சியாக உருவாக்கும் என அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்.பதிவில் கூறியுள்ளதாவது:-

கோவையில் பதிவான வாக்குகளில் 1.90 லச்சம் வாக்குகள் 2014 தேர்தலை விட 2024 தேர்தலில் உயர்ந்துள்ளது. அதில் அண்ணாமலை, சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வாங்கிய வாக்குகளை விட வெறும் 60,000 வாக்குகள் தான் அதிகம் வாங்கியுள்ளார். அதில் புதிய வாக்காளர்களும், பாஜக கூட்டணியை விரும்பும் அதிமுக வாக்காளர்களும் வாக்களித்திருக்கலாம்.

அண்ணாமலை சொல்வது போல பாஜக இவர் தலைமையில் பெரிய அளவு வளர்ச்சியடையவில்லை. உண்மை நிலை உணராமல் தொடர்ந்து பொய் செய்திகளையே பரப்பி வருகிறார். 2014-ல் ஜெயலலிதா அம்மா மோடியா? லேடியா? என்று பாஜகவை கடுமையாக எதிர்த்தார், அதே சமயம் திமுகவையும் கடுமையாக எதிர்த்து தேர்தலை சந்தித்த பொழுது அதிமுக வெற்றிபெற்றது. ஆனால் 2024 தேர்தலில் பாஜக எதிர்ப்பு பெரிய அளவு இல்லாமல் குறைந்தபட்சம் அண்ணாமலையை கூட தலைவர்கள் மட்டத்தில் எதிர்க்காமல் பிரச்சாரங்கள் மேற்கொண்டது மக்களிடம் நம்பகமற்ற தன்மையை ஏற்படுத்திவிட்டது. அதனால் பாஜகவுக்கு எதிரான மனநிலை கொண்ட அதிமுக ஆதரவான சுமார் 2 லட்சம் வாக்குகள் திமுகவுக்கு சென்றுள்ளது.

எனவே 2014-ல் திமுக இருந்த இடத்திற்கு அதிமுக வந்து விட்டது, அதிமுக இருந்த இடத்திற்கு திமுக வந்துவிட்டது. இதற்கான தீர்வு வேலுமணி சொல்வது போல் பாஜகவோடு கூட்டணி அமைத்தால் வெற்றிபெறலாம் என்பது தவறு. அம்மா காலத்தை போல கடுமையான பாஜக எதிர்ப்பு நிலைப்பாடும், திமுக எதிர்ப்பு நிலைப்பாடும் தான் அதிமுகவை தனித்து நின்று வெல்லுகிற கட்சியாக உருவாக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.