தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-
தேர்தலில் வெற்றி, தோல்வியை வைத்து எல்லாம் ஒரு கட்சியின் பின்னடைவாக பார்க்க முடியாது. தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி 8 முறை வந்திருந்தார். ரோடு ஷோ நடத்தப்பட்டது. அமித்ஷா, ஜே.பி. நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் எல்லாம் வந்து பாஜகவுக்கு பிரச்சாரம் செய்தார்கள். அது போல் திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், இந்தியா கூட்டணி கட்சிக்காக ராகுல்காந்தி, திருமாவளவன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.
ஆனால் அதிமுக சார்பில் நான் மட்டுமே பரப்புரை செய்தேன். அது போல் தேமுதிக சார்பில் பிரேமலதா பரப்புரை செய்தார். இப்படியெல்லாம் நிறைய பேர் பிரச்சாரம் செய்தும் திமுகவின் வாக்கு சதவீதம் கடந்த 2019ஆம் ஆண்டை விட திமுகவின் வாக்கு சதவீதம் இந்த முறை 6 சதவீதம் குறைந்துள்ளது. அது போல் பாஜகவின் வாக்கு சதவீதம் 2014 ஆம் ஆண்டை விட 0.26 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் அதிமுகவின் வாக்கு சதவீதம் கடந்த 2019ஆம் ஆண்டை விட தற்போது 1 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்தல்களில் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி வெற்றியையும் வீழ்ச்சியையும் சந்தித்துத்தான் வருகிறது.
சட்டசபை தேர்தல் வேறு, நாடாளுமன்றத் தேர்தல் வேறு, எனவே வரும் 2026 ஆம் ஆண்டு அதிமுக அமோக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும். அதிமுகவின் வேட்டியை மாற்றிக் கொண்டு திமுகவின் கரை வேட்டியை கட்டிய அமைச்சர் ரகுபதிக்கு அதிமுகவை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது. எதிரிகளோடு சேர்ந்து குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கிறார். கடந்த தேர்தல்களில் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய ஓட்டுக்களை விட குறைந்த எண்ணிக்கையில்தான் அண்ணாமலை வாங்கியுள்ளார். அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுக. ஆனால் அவரோ அதிமுகவை லோக்சபா தேர்தலுக்கு பிறகு அழிந்துவிடும் என கூறியிருந்தார். இது போல் பலர் கூறியதை கேட்டு நாங்கள் இன்று வலுவாக இருக்கிறோம். அண்ணாமலையின் கனவு பலிக்காததால் எங்களை பற்றி விரக்தியில் பேசுகிறார் என்றார்.
இப்போது பாஜக அதிமுக கூட்டணி இருந்திருந்தால் 35 இடம் வரை வந்திருக்கலாம் என எஸ்பி வேலுமணி கூறியிருக்கிறாரே என எடப்பாடி பழனிச்சாமி இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த அவர், ”இருந்திருந்தால் போயிருந்தால் என்பதெல்லாம் கவலை இல்லை.. சூழலுக்கு ஏற்ப கூட்டணி.. ஆனால் அதிமுக தோற்றத்திற்கு பாஜக கூட்டணி இல்லாததற்கு காரணம் என சொல்லி இருக்க மாட்டார். அவர் பேசியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருக்கின்றன. அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை சாதாரண ஒரு நிகழ்வை இவ்வளவு பெரிய பிரச்சனை போல எழுப்பி விவாதம் நடத்த வேண்டிய அவசியம் என்ன?”என கேள்வி எழுப்பினார்.