நாடு முழுவதும் நடைபெற்று முடிவுகள் வந்திருக்கும் நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நீட் முறைகேடு 24 லட்சம் மாணவர்களின் வாழ்வை சீரழித்துவிட்டது எனவும், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த மே மாதம் 5ஆம் தேதியன்று நடத்தியது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் 23 லட்சம் பேர் வரை தேர்வில் கலது கொண்டனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய தேர்வுகள் முகமை செய்திருந்த நிலையில் பெரிய அளவில் தமிழகத்தில் முறைகேடுகள் இல்லாமல் நடைபெற்றது. அதே நேரத்தில் பல மாநிலங்கள் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
அதாவது மே மாதம் 5 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும் என எண்டிஏ கூறியிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான முடிவுகளிலும், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதாவது, ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து எதிர்க் கட்சிகள் கையில் எடுத்துள்ளன.
இந்நிலையில் நீட் முறைகேடு 24 லட்சம் மாணவர்களின் வாழ்வை சீரழித்துவிட்டது எனவும், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
நரேந்திர மோடி இன்னும் பதவியேற்கவில்லை.. ஆனால் அதற்குள் நீட் தேர்வில் நடந்த ஊழல் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களுடன் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளனர், பலர் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாத மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர், ஆனால் வினாத்தாள் கசிவு என்பதை அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. கல்வி மாஃபியா மற்றும் அரசு இயந்திரத்துடன் கூட்டு சேர்ந்து நடத்தப்படும் இந்தக் வினாத் தாள் கசிவு விவகாரத்தை சமாளிக்க காங்கிரஸ் வலுவான திட்டத்தை வகுத்தது
எங்கள் தேர்தல் வாக்குறுதியிலும், சட்டம் இயற்றுவதன் மூலம் மாணவர்களை முறைகேடுகளில் இருந்து விடுவிப்பதாக உறுதியளித்தோம். இன்று, நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் நான் பாராளுமன்றத்தில் உங்கள் குரலாக மாறுவேன் என்றும் உங்கள் எதிர்காலம் தொடர்பான பிரச்சினைகளை வலுவாக எழுப்புவேன் என்றும் உறுதியளிக்கிறேன். இந்தியா தங்கள் குரலை ஒடுக்க அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.