காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த பயங்கரவாத சம்பவத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத சம்பவங்கள் என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. கடந்த காலங்களில் பல முறை அங்கு மோசமான பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதேநேரம் சில மாதங்களாகக் காஷ்மீரில் பெரியளவில் தீவிரவாத சம்பவங்கள் நடக்காமல் இருந்தது. இதற்கிடையே இப்போது காஷ்மீரில் மீண்டும் ஒரு அசம்பாவிதம் அரங்கேறி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி என்ற பகுதியில் பயங்கரவாத சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. அங்குப் பேருந்து ஒன்று பக்தர்களை ஏற்றிச் சென்று கொண்டு இருந்துள்ளது. அதை நோக்கி அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த எதிர்பாராத தாக்குதலில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகே இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. அந்த பேருந்து பக்தர்களை ஏற்றிக் கொண்டு ஷிவ்கோடி குகைக் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த நிலையில், இந்த பயங்கரவாத சம்பவம் நடந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தில் பல பக்தர்கள் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தோரை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த தகவல் கிடைத்த உடன் உதவிக்காக ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளன. இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட வீடியோக்கள் இப்போது வெளியாகி உள்ளது. அதில் உள்ளூர் மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவுவது பதிவாகி இருக்கிறது. இது பயங்கரவாத தாக்குதல் என்பதால் போலீஸ், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இந்த தாக்குதலில் ஈடுபட்டது எந்த பயங்கரவாத அமைப்பு.. எதற்காக இந்தத் தாக்குதலை நடத்தினர் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகவில்லை. விரைவில் இது குறித்த தகவல்களும் தெரிய வரும் என்றும் தெரிகிறது. அந்த பேருந்தில் பல பக்தர்கள் பயணித்த நிலையில், குறைந்தபட்சம் 10 பேர் உயிரிழந்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.