பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு ஆட்சியமைக்க ஜனாதிபதியிடம் உரிமை கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரதமர் மோடியை ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி முர்மு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பிரதமர் மோடியுடன் 72 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.
இந்நிலையில், 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-
தொடர்ச்சியாக 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமராக நீங்கள் அரசியலமைப்பை நிலைநிறுத்தவும், நாட்டின் மதச்சார்பின்மையை பராமரிக்கவும், கூட்டாட்சி தத்துவத்தை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மதிக்கவும், நமது ஜனநாயகத்தை பாதுகாக்கவும் உண்மையுடன் பாடுபடுவீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் (த.வெ.க.) விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பிரதமராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ள மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.