வயநாடு அல்லது ரேபரேலி எந்த தொகுதியின் எம்பியாக நீடிப்பது என்பது குறித்து மக்களிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
லோக்சபா தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்ட ராகுல் காந்தி 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றார். அதேபோல உ.பி.யின் ரேபரேலி லோக்சபா தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெற்றார். ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, 390030 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதனையடுத்து ராகுல் காந்தி எந்த தொகுதியை தக்க வைத்துக் கொண்டு எம்பியாக நீடிப்பார்? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ராகுல் காந்தி ராஜினாமா செய்யப் போகும் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி களமிறக்கப்படலாம் என்பதும் ஆரூட தகவல்கள்.
இந்த நிலையில் வயநாடு லோக்சபா தொகுதிக்கு ராகுல் காந்தி வருகை தந்து தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-
நான் வெற்றி பெற்ற வயநாடு, ரேபரேலி இரு தொகுதி மக்களுமே மகிழ்ச்சி அடையும் வகையில் முடிவெடுப்போம். வயநாடு அல்லது ரேபரேலி எம்பியாக நீடிப்பது குறித்து மக்களுடன் ஆலோசித்துவிட்டுதான் முடிவெடுப்போம்.
பிரதமர் மோடி தமக்கு பரமாத்மா வழிகாட்டுவதாக சொல்கிறார். ஆனால் நான் ஒரு சாமானியன். சாதாரண மனிதன். எனக்கு பரமாத்மா எல்லாமே என் மக்கள்தான். ஆகையால் எங்கள் மக்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதை ஏற்றுக் கொண்டு கட்டுப்பட்டு செயல்படுவேன். லோக்சபா தேர்தலுக்கு முன்னர் நாட்டின் அரசியல் சாசனத்தையே மாற்றுவோம் என பாஜக தலைவர்கள் பேசினர். ஆனால் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பிரதமர் மோடியே அரசியல் சாசனத்தை தொட்டு வணங்குகிறார். அரசியல் சாசனப் புத்தகத்தின் முன்பாக மண்டியிட்டு வணங்கினார் மோடி. ஆம் மக்கள் இந்த நாட்டில் வெறுப்பை விதைத்த சக்திகளை தேர்தலில் தோற்கடித்துவிட்டனர். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.