குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உடல் கருகியும், மூச்சுத்திணறியும் 53 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களின் பலர் இந்தியர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 43 பேர் காயமடைந்துள்ள நிலையில், இவர்களில் 30 பேர் இந்தியர்கள் என தகவல் கிடைத்துள்ளது. கோர தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்ததை குவைத் அரசு உறுதிப்படுத்தி உள்ளது. இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட சுமார் 195 தொழிலாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போதைய தகவல்படி உயிரிழந்தவர்களில் 40 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் உதவி எண்ணை அறிவித்துள்ளது. +965-65505246 என்ற எண்ணை, பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், உதவிக்காகவும் மக்கள் அழைக்கலாம். தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குவைத் தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்ததை அடுத்து, குவைத் நாட்டுக்கு விரைகிறார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங். பிரதமர் மோடி உத்தரவின் பேரில் குவைத் விரைகிறார் வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலைகளை விரைந்து இந்தியா கொண்டு வரவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சையை உறுதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், அதனை உறுதி செய்வதற்காக குவைத் செல்கிறார் வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதை மேற்பார்வையிடவும், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் இறந்தவர்களின் சடலங்களை விரைவாக இந்தியா அனுப்புவதற்கு உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கவும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கே.வி.சிங் அவசரமாக குவைத் செல்கிறார் என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது எண்ணங்கள் அனைத்தும் உயிரிழந்தவர்களுக்கு நெருக்கமானவர்களை பற்றி தான் உள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான ஜெய்சங்கர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,” குவைத் தீ விபத்து குறித்த செய்தியால் அதிர்ச்சி அடைந்தேன். 40 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். அடுத்தகட்ட தகவலுக்காக காத்திருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம்,”காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு இந்திய தூதரகத்தைச் சேர்ந்த ஆதர்ஷ் ஸ்வைகா நேரில் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 30 இந்தியர்களை நேரில் சந்தித்தார். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் வழங்கும் என உறுதி அளித்துள்ளார். அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருமே விரைவில் குணமடைவார்கள் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.