குவைத் தீ விபத்தில் 5 தமிழர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

குவைத் தீ விபத்தில் தமிழர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

குவைத் நாட்டின் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இவர் ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூரைச் சேர்ந்தவர். கருப்பணன் ராமுவின் உறவினர்கள் மூலம் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, குவைத் தீ விபத்தில் ஐந்து தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கிருக்கும் தமிழ் சங்கம் மூலம் தமிழர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். எனினும், தமிழர்கள் இறப்பு குறித்து தூதரகம் மூலம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அந்தக் கட்டிடத்தில் பணிபுரிந்த கடலூரைச் சேர்ந்த சின்னத்துரை, பேராவூரணியைச் சேர்ந்த புனாப் ரிச்சர்ட் உள்ளிட்டோர் நிலை குறித்து தெரியாததால் அச்சம் நிலவி வருகிறது.

இந்நிலையில், தீ விபத்து தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையின்போது தீ விபத்து தொடர்பாக அயலக தமிழர் நலத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளார்.

முன்னதாக, குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியுள்ளனர். இந்த கட்டிடம் குவைத் நாட்டை சேர்ந்தவருக்கு சொந்தமானது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அலசும் போது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

எகிப்து நாட்டு காவலாளி தங்கியிருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது தீ விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிடத்தின் கீழ்தளத்தில் அந்த காவலாளி தங்கியுள்ளார். அதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 195 பேர் தங்கி இருந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். அவர்களில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள். தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தவர்களில் 92 பேர் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 பேர் இரவு ஷிப்ட் என்பதால் பணிக்கு சென்றுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் என்பிடிசி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் தங்கி இருந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட நேரம் அதிகாலை 4 மணி என்பதால் பெரும்பாலானவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அது உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என தெரிகிறது. தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்த காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளனர். சிலர் தீ விபத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதிக்க முயன்று உயிரிழந்துள்ளனர்.