குவைத் நாட்டில் நடந்த தீ விபத்தில் இந்தியர்கள் மரணத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
குவைத் நாட்டின் தெற்கு நகரமான மங்காஃபில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 இந்தியர்கள் உட்பட 49 வெளிநாட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் காயமடைந்தனர். நேற்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. அதிகாலையில் தொடங்கிய தீ வேகமாக கட்டிடம் முழுவதும் பரவி பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தூதர் முகாமுக்கு சென்றுள்ளார் என்று கூறினார். “குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து செய்தி அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எங்கள் தூதர் முகாமிற்கு சென்றுள்ளார். மேலதிக தகவல்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று ஜெய்சங்கர் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் கூறியுள்ளதாவது:-
குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குவைத் தீவிபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வீராசாமி மாரியப்பன், முகமது ஷெரிப், ரிச்சர்டுராய், சிவசங்கர், சின்னதுரை, ராஜூ எபினேசர், ராமு கருப்பண்ணன் ஆகியோர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்களை இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு இந்தியாவிற்குள் – +91 1800 309 3793, வெளிநாடு – +91 80 6900 9900, +91 80 6900 9901 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.