தவறான தகவல்களை பரப்பும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: எல்.முருகன்!

தவறான தகவல்களை பரப்பும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் எச்சரித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக தமிழக பாஜகவில் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் வெடித்திருந்தன. குறிப்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாஜகவின் ஐடி விங் செயல்பாடுகள் குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இது தமிழிசைக்கும், மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான மோதலாக பார்க்கப்பட்டது. இந்த சம்பவத்தின் பரபரப்பு ஓய்வதற்குள், மற்றொரு சம்பவம் பெரும் விவாதங்களை கிளப்பியது. அதாவது ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு கடந்த புதன்கிழமை பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். மேடையில் அமர்ந்திருந்த அமித்ஷாவுக்கு வணக்கம் வைத்துவிட்டு மேடையேறிய தமிழிசை சௌந்தர ராஜனை, அமித்ஷா அழைத்து பேசியிருந்தார். அப்போது அவருடைய முக பாவனைகள் கண்டிப்புடன் கூடியதாக இருந்ததாகவும், தமிழிசையை அவர் பொது மேடையில் வைத்து கண்டித்ததாகவும் சோஷியல் மீடியாக்களில் வைரலாக பேசப்பட்டது.

இதற்கு அமித்ஷா தரப்பிலிருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தமிழிசை தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டது. அதில், “நான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 2024 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக ஆந்திராவில் சந்தித்தேன். அப்போது அவர் தேர்தலுக்கு பிந்தைய சூழல், களத்தில் உள்ள சவால்கள் பற்றி என்னிடம் கேட்டார். மேலும், அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளைக் கவனிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்தச் சந்திப்பு தொடர்பான தேவையற்ற யூகங்களுக்கு விளக்கம் அளிக்கவே இதைப் பதிவிட்டுள்ளேன்” என்று ட்வீட் செய்திருந்தார்.

ஆனாலும், நெட்டிசன்கள் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து பல்வேறு மாற்று கருத்துக்களை கூறி வருகின்றனர். இது தொடர்பாக செய்தி சேனல்களிலும் விவாதங்கள் எழுந்தன. இந்த பின்னணியில்தான் மத்திய இணையமைச்சர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எல்.முருகன், “தூர்தர்ஷன் என்றால் அதிகாரப்பூர்வமான செய்தி என்கிற நம்பிக்கை இருக்கிறது. அதேபோல மற்ற செய்தி ஊடகங்களும் இருக்க வேண்டும். பிரேகிங் செய்திக்காக தவறான செய்தியை பரப்ப வேண்டாம். அப்படி பரப்பப்படும் செய்தி ஊடகங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.