குவைத் செல்ல தனக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
குவைத்தின் மங்காஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அவர்களில் 45 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்தது. இதில் கேரளாவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை இந்திய விமானப்படை விமானம் மூலம் கொண்டு வரும் பணிகளை மத்திய அரசு மேற்காண்டது. மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் குவைத் சென்றார். அங்கு காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் இந்தியர்களை விசாரித்தார். அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா அலி அல் யாஹ்யாவை சந்தித்து இந்தியர்களின் உடல்களை தாயகத்துக்கு கொண்டு செல்ல விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் 31 பேரின் உடல்கள் ராணுவ விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. கேரளாவை சேர்ந்த 23 பேர், தமிழகத்தை சேர்ந்த 7 பேர் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரது உடல் கொண்டுவரப்பட்டது. அவர்களின் உடலுக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங். தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தனித்தனி வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் முன்னதாக கேரள மாநிலத்தை சேர்ந்த, இறந்தவர்களின் உடலை அம்மாநிலத்துக்கு கொண்டு வருவதற்கான பணிகளை கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், தேசிய சுகாதார இயக்ககத்தின் ஜீவன் பாபு உள்ளிட்டோர் குவைத் செல்ல உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர்கள் குவைத் செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குவைத்திற்கு தான் செல்ல மத்திய அரசு அனுமதி அளிக்காதது துரதிருஷ்டம் என்றும், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு உதவ குவைத் செல்ல இருந்த தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என வேதனை தெரிவித்தார்.