திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டது. திமுக ஆட்சியில் தலைநகரம் சென்னை கொலை நகரமாக மாறி விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கொலை, கொள்ளை குறித்த செய்திகள் இடம்பெறாத நாட்களே இல்லை என்ற மோசமான நிலையில் தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது. வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் மிகவும் அதிகரித்துள்ளன என National Crime Records Bureau அறிக்கை தெரிவித்திருக்கிறது. ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலின், நாட்டு நடப்பே தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை வரி மாறாமல் வாசித்து விட்டுச் செல்கிறார். முதலமைச்சர் உண்மையில் செய்திகளைப் படிக்கிறாரா அல்லது அவருக்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அதிகாரிகள் தெரிவிக்கிறார்களா என்பது கூடத் தெரியவில்லை.
நீதிமன்றங்களில், பரபரப்பான சாலைகளில், பொதுமக்கள் கூடும் இடங்களில், பள்ளி, கல்லூரி வாசல்களில், காவல் நிலையங்களில் என, படுகொலைகள் நடைபெறாத இடங்களே இல்லை எனலாம். தமிழகத்தில் எந்தப் பகுதியிலுமே பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, உண்மையில் முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் காவல்துறை இயங்குகிறதா என்ற கேள்வியையும், அச்ச உணர்வையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, தலைநகரம் சென்னை, கொலை நகரமாகவே மாறிவிட்டது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் குற்றங்களுக்குப் பழி தீர்க்கும் இடமாக, சென்னை மாறியிருக்கிறது. சென்னையின் பரபரப்பான சாலைகளில், பொதுமக்கள் மத்தியில், ஓட ஓட விரட்டிக் கொல்வது என்பது சாதாரண ஒரு நிகழ்வாக மாறியிருக்கிறது.
கொலைக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருக்கிறார்கள். தாங்கள் செய்யும் குற்றத்திற்கான விளைவுகளை எண்ணிப் பார்க்கும் நிலையில் கூட அவர்கள் இல்லை. பெருகியிருக்கும் கஞ்சா புழக்கத்தினால், இளைஞர்களை அடிமையாக்கி, குற்றச் செயல்களில் கூலிப்படையாகச் செயல்பட தூண்டப்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்தை, திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. நேற்றைய தினம், தமிழக பாஜக மகளிர் அணியின் மாநிலப் பொதுச்செயலாளர், வழக்கறிஞர் திருமதி. நதியா சீனிவாசன் அவர்களது கணவர் திரு. சீனிவாசன் அவர்கள் மீது கூலிப்படையினரை கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. சென்னையின் மிக முக்கியப் பகுதியான அண்ணா நகர் பகுதியில் துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மிக அருகில், பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில், இந்தத் தாக்குதல் நடைபெற்றிருப்பது. முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பில் இருக்கும் காவல்துறை முற்றிலும் செயலிழந்திருப்பதைக் காட்டுகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது மரணப்படுக்கையில் கிடப்பதை உணர முடிகிறது. நேற்று மட்டும் சென்னையில் நடந்த மூன்று கொலைகள், இங்கிருக்கும் சட்டம் ஒழுங்கை பிரதிபலிக்கிறது. திமுகவின் மூன்று ஆண்டு கால அலங்கோல ஆட்சியில், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க முடியவில்லை. இவை பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. ஆனால், திமுக அரசோ, ஆட்சியை விமர்சிப்பவர்களையும், எதிர்க்கட்சியினரையும் பழிவாங்குவதற்காக மட்டுமே உளவுத் துறையையும், காவல்துறையையும் பயன்படுத்துவதன் விளைவு, இன்று தமிழகத்தில் பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள், தங்கள் பாதுகாப்புக்கு இனி காவல்துறையை நம்பிப் பயனில்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.
இவை குறித்து எதுவும் அறியாமல், துண்டுச் சீட்டைப் பார்த்து, நாங்கள் நம்பர் ஒண் என்று கனவுலகில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை, தூக்கத்தில் இருந்து யாரேனும் தட்டி எழுப்ப வேண்டும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் கிடப்பதை எடுத்துக் கூற வேண்டும். பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதைப் புரிய வைக்க வேண்டும். தமிழகத்தில், குற்றச் செயல்களையும், போதைப் பொருள்கள் புழக்கத்தையும் இனியும் கட்டுப்படுத்தவில்லை என்றால், பெரும் எதிர்விளைவுகளை திமுக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.