கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில், அவர் நீதிமன்றத்தில் பேசிய வீடியோவை சோஷியல் மீடியாக்களிலிருந்து டெலிட் செய்ய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சுனிதா கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு செய்ததாக கூறி அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் கைது செய்தது. தன்னுடைய கைதை எதிர்த்து கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது அவர் ஆஜராகியிருந்தார். இப்படி ஆஜரான போது அவர் கூறிய பதில்கள் வீடியோவாக ரெக்கார்ட் செய்யப்பட்டிருந்தது. இந்த வீடியோவை சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டிருந்தார். இதுதான் தற்போது பெரும் பஞ்சாயத்தாகா வெடித்திருக்கிது. இந்த வீடியோவை சோஷியல் மீடியாக்களிலிருந்து நீக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டிருந்து.
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வைபவ் சிங் என்பவர் இந்த வழக்கை தொடுத்திருந்தார். வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நீனா பன்சால் கிருஷ்ணா, அமித் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “சுனிதா கெஜ்ரிவால், அக்ஷய் மல்ஹோத்ரா, x பயனர் நாக்ரிக்-இந்தியா ஜீதேகா, ப்ரோமிலா குப்தா, வினீதா ஜெயின் மற்றும் டாக்டர் அருணேஷ் குமார் யாதவ் ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் வீடியோ கான்பரன்சிங் விதிகளை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடியோவை அப்லோட் செய்திருக்கிறார்கள் என்று வைபவ் சிங் வாதிட்டார். மேலும், இது ஒரு சதி செயல் என்றும், எனவே இதில் ஈடுபட்டவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதனையடுத்து சோஷியல் மீடியாக்களிலிருந்து சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
டெல்லி அரசின் 2021-2022ம் ஆண்டு மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா சிபிஐக்கு பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது. இந்த முறைகேடு மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறையும் தனது பங்குக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இப்படியாக கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டது.
இதனையடுத்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின் கீழ் தன்னை கைது செய்தது தவறு என்றும், அமலாக்கத்துறை சட்டவிரோதமாக செயல்பட்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மாவின் ஒரு நபர் அமர்வுக்கு முன்னர் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் கெஜ்ரிவாலுக்கு சாதகமாக அமையவில்லை. மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் தேர்தல் முறையும் வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.