கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் போதைப் பொருள் கடத்தியதாக 2,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7,000 மேற்பட்டோர கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் இளைஞர்களை ஒட்டுமொத்தமாக சீரழித்து வரும் போதை பொருள் நாசகார சக்திகளை இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளதாவது:-
எங்கே செல்கிறது தமிழ்நாடு என்று இன்றைக்கு, தமிழ்நாடு மக்கள் ஒட்டு மொத்தமாக கவலை அளிக்கின்ற விஷயம் பார்க்கப்படுவது தமிழகத்திலே போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது என்பது தான். அதைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு அதை எப்படி கையாளுகிறது என்ற விவாதம் வந்து கொண்டிருக்கிறது. சட்டமன்றத்திலே முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து விரிவாக எடுத்து வைத்தும் கூட, இந்த அரசு எந்த நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இன்றைக்கு போதை பொருள் கடத்தல் மன்னன் என அடிப்படையிலே திமுக கட்சியை சேர்ந்தவரே 20,000 கோடி அளவில் கடத்தியுள்ளார். அது விசாரணையில் இருந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு கூட 150 கோடி அளவில் போதை பொருளை இலங்கைக்கு கடத்த முயன்றபோது அது பறிமுதல் செய்து இருக்கிறது. இதை கவலை அளிக்கக் கூடிய ஒரு நிலையை நாம் பார்க்கிறோம்.
எதிர்கால இளைஞர் சமுதாயத்தை போதை பாதையில் இருந்து மீட்டு, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி தரும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருப்பது போல இந்த அரசுக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை இந்த அரசு உணர்ந்து இருக்கிறதா என்பது தெரியவில்லை. போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் போதை பொருள் கடத்தும் குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு நசுக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்றும், இன்றைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன் வருமா? என்று தமிழ்நாடு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். போதைப்பொருள் பயன்பாடு மனதையும், உடலையும் மாற்றி அவர்கள் எதிர்காலத்தை சீரழித்து வருகிறது. கஞ்சா, அபின் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் பலரகம் இருந்தாலும், மாத்திரை வடிவிலும் இன்றைக்கு போதை பொருள் சர்வ சாதாரணமாக விற்கக்கூடிய சூழ்நிலையை நாம் பார்க்கிறோம்.
ஆகவே இளைஞர்களை பேரழிவுக்கு இழுத்துச் செல்லும் போதை பொருள் நடமாட்டத்தை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தொடர்ந்து சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியும் அதனைத் தொடர்ந்து அவர் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றாலும், அதுகுறித்து எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் கூட, முதலமைச்சர் அவர்கள் இதுகுறித்து போதைப்பொருள் நடமாட்டம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்கிற நிலையை நாம் பார்க்கிறோம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் போதை பொருள் நடத்தியதாக 2,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7,000 மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவித்தாலும் இதில் 4,000 மேற்பட்டவர்கள் அசாம், ஒடிசா, மணிப்பூர், மேகாலயா என வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் சமீப காலமாக போதை பொருள் தொடர்பான பல குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை, சேலம் போன்ற மாவட்டங்களில் அண்டை மாநிலங்களில் இருந்து நடத்திவரப்பட்ட போதைப்பொருட்கள் பிடிபட்டன என்ற செய்திகள் வெளியாகிவருகின்றன. இதுவரை தமிழக அரசியலில் வரலாறு காணாத வகையில் போதைப்பொருள் நடமாட்டம் சர்வ சாதாரணமாக தங்கு தடையின்றி கிடைத்து மாணவர்கள் செல்வங்களை, இளைஞர்களை ஒட்டுமொத்தமாக சமுதாயத்தை சீரழிக்கிற இந்த போதை பொருள் நாசகார சக்தியை இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.