கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ள நிலையில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்க் மாவட்டத்தில் நேரிட்ட ரயில் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் வெற்றியடையவும் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகளிடம் பேசி நிலைமை குறித்து கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செல்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தில் ரயில் விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியத்தில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விபத்து நடந்த மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விரைந்துள்ளார். முன்னதாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வடகிழக்கு எல்லை ரயில்வே பிராந்தியத்தில் துரதிருஷ்டவசமான விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை நெருக்கமாக இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு எக்ஸ் பதிவில், ரயில்வே சார்பில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்றும் கடுமையான காயமடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் வழங்கப்படும் என்றும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் மீட்புப் பணிகள் முடிவடைந்திருப்பதாகவும், விபத்தில் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும் 25 பேர் காயமடைந்திருக்கிறார்கள் என்றும் ரயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜெய வர்மா சின்ஹா தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “மீட்புப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த விபத்தில், சிக்னலைப் புறக்கணித்த சரக்கு ரயில் ஓட்டுநர், உதவி ஓட்டுநர், கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலின் காவலர் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். அகர்தலா-சீல்டா வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டத் தகவலின்படி, விபத்துக்கு மனித தவறுகள் காரணம் என்பது தெரியவந்துள்ளது. சிக்கனலை புறக்கணித்ததே விபத்துக்குக் காரணம்” என தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் அஸ்ஸாமின் சில்சார் இடையே இயக்கப்படுகிறது. திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில் இருந்து சீல்டாவுக்கு வந்து கொண்டிருந்தபோது, ரங்கபாணி ரயில் நிலையம் அருகே பின்னால் வந்த சரக்கு ரயில் மோதியதில் நேரிட்டதாக வடகிழக்கு எல்லை ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சப்யாச்சி டி தெரிவித்துள்ளார். சரக்கு ரயில் சிக்னலை மீறியதாகவும், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புற பார்சல் பெட்டி மீது மோதியதாகவும் கூறப்படுகிறது.