ஒரு மருத்துவராக சொல்கிறேன் நீட் தேர்வு நல்லதே கிடையாது: அன்புமணி!

“ஒரு மருத்துவராகவும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையிலும் சொல்கிறேன். நீட் தேர்வு நல்லதே கிடையாது. இதை இந்தியாவில் இருந்தே தூக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு, தற்போது நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடப்பாண்டு நீட் தேர்வு வினாத் தாள்களிலும், நீட்தேர்வு முடிவுகளிலும் நடந்த குளறுபடிகளும், மோசடிகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வட மாநிலம், தென் மாநிலம் என்கிற பாரபட்சமின்றி போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

ஒரு மருத்துவராக, முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் சொல்கிறேன். நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே தேவை கிடையாது. நீட் தேர்வு கொண்டு வந்ததற்கு என்ன காரணம் தகுதியான மருத்துவர்கள் வர வேண்டும்; மருத்துவப் படிப்பு வணிகமயமாக ஆகக்கூடாது என்பதற்காகதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ன நடக்குது? 7 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் 3 லட்சம், 4 லட்சம் தான் இருந்தது. ஆனால் இப்போது 20 லட்சம், 30 லட்சம் என மாறிவிட்டது. இது எம்பிபிஎஸ் கட்டணம் தான். மேற்படிப்புக்கு 70 லட்சம், 80 லட்சம் ரூபாய் கட்டணமாக இருக்கிறது.

அதை விடுங்க.. நீட் தேர்வே ஒரு பிஸ்னஸ் ஆக மாறிவிட்டது. நீட் பயிற்சி மையங்கள் என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி வருமானம் வருகிறது. அப்படியென்றால், பணம் இருப்பவர்கள் மட்டும்தான் நீட் படிக்க முடியும். கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை மாணவர்களால் நீட் பயிற்சியிலேயே சேர முடியாது. அப்படி பார்த்தால், நீட் தேர்வால் என்ன நீதி கிடைக்குது? நீட் தேர்வில் 720-க்கு 520 எடுத்த ஏழைத் தொழிலாளியின் மகனால், மருத்துவக் கல்லூரியில் சேர முடியல. ஆனால், 110 மார்க் எடுத்த பையன், மருத்துவக் கல்லூரியில் சேருகிறான். ஏன்? இவன் அப்பாவால் தனியார் மருத்துவக் கல்லூரியில் லட்சக்கணக்கில் கட்டணம் கட்ட முடியும். அந்த பையனில் அப்பாவால் கட்ட முடியல. இது என்ன நியாயம்? கடந்த ஆண்டு நீட் தேர்வில் உயர் மருத்துவப் படிப்புக்கு தகுதி என்ன தெரியுமா? பூஜ்ஜியம். அப்புறம் எப்படி நீட் தேர்வால் தகுதியான மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்று சொல்ல முடியும்?. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பினார்.