ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படாததற்கு அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என்று வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. பொது விநியோகத்தில் வரலாற்றுச் சாதனைகளைப் புரிந்து, நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழ்நாட்டின் ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அவலநிலைக்கு சீர்கெடச் செய்த இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். ஏழை எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சீராக விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 2.06 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகிறார்கள். மாதந்தோறும் ரேஷன் கடைகளில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மாதம் துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்படவில்லை என புகார்கள் எழுந்தன. இந்த இரு பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களான துவரம் பருப்பும் பாமாயிலும் கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில்தான் இதற்கான விளக்கத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் சிறப்பு பொது விநியோக திட்ட பொருட்களான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் கடந்த 14.04.2007 முதல் ஒவ்வொரு மாதமும் திறந்தவெளி ஒப்பந்தபுள்ளி மூலம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மே மாதத்துக்கு தேவையான 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு/ கனடா மஞ்சள் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளுக்குரிய இ-ஒப்பந்தப்புள்ளி இந்திய தேர்தல் ஆணைய 18.04.2024ம் தேதி ஒப்புதலின்படி 20.4.2024 அன்று கோரப்பட்டு 20.05.2024 அன்று ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 4.05.2024 அன்று விலைப்புள்ளி திறக்கப்பட்டது. இதில் குறைந்த விலைப்புள்ளி அளித்திருந்த பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்தாரர்களுடன் விலைக்குறிப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. விலைக்குறைப்பு பேச்சுவார்த்தையில் நியாயமான விலை கிடைக்க பெற்றதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குழுமத்தின் ஒப்புதலின்படி துவரம்பருப்பு விநியோகிப்பாளர்கள் நால்வருக்கும், பாமாயில் விநியோகிப்பாளர்கள் மூவருக்கும் கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு நாளது தேதி வரை நடப்பு மே மாதத்துக்குரிய விநியோகிப்பதற்காக நியாய விலைக்கு கடைகளுக்கு 5,405 மெட்ரிக் டன் துவரம் பருப்பு மற்றும் 31,19,722 பாமாயில் பாக்கெட்டுகள் நகர்வு செய்யப்பட்டுள்ளன. ஆகவே அனைத்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை தமிழக அரசு தேவையான அளவுக்கு கொள்முதல் செய்து கிடங்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் இந்த மாதத்திற்கான துவரம் பருப்பையும் பாமாயிலையும் வரும் ஜூன் மாதம் முதல் வாரம் வரை ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் பொருளே சிலருக்கு கிடைக்கவில்லை என குற்றம்சாட்டும் நிலையில் ஜூன் மாதமும் துவரம் பருப்பு, பாமாயிலை அரசு விநியோகம் செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. சில கடைகளில் துவரம் பருப்பு இருந்தாலும் பாமாயில் இல்லை, இது இருந்தால் அது இல்லை என்ற நிலை இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகிறர்கள்.