அதிமுக சாதி கட்சியாக மாறுவதாக சசிகலா குற்றம்சாட்டிய நிலையில் அதனை எடப்பாடி பழனிச்சாமி முற்றிலுமாக மறுத்துள்ளார். அதோடு அந்த குற்றச்சாட்டை கூறிய சசிகலாவை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார். சசிகலா கூறுகையில், ‛‛அதிமுக என்பது குறிப்பிட்ட சாதி கட்சியாக மாறி வருகிறது. அதிமுக அழிவதாக யாரும் நினைக்க வேண்டும். விரைவில் என்ட்ரி கொடுக்கிறேன்” என்று தெரிவித்தார். இந்நிலையில் தான் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் நடந்த திருமண விழாவில் இன்று எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அதன்பிறகு தஞ்சாவூரில் உள்ள தனியார் ஓட்டலில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
இந்த வேளையில், ‛‛அதிமுக சாதிக்கட்சியாக மாறிவிட்டதாகவுகம், விரைவில் என்ட்ரி கொடுப்பதாகவும் சசிகலா கூறுகிறாரே?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ‛‛எந்த அடிப்படையில் அவர் சொல்கிறார் என்று நீங்கள் தான் கேட்க வேண்டும். அதிமுகவில் ஜெயலலிதா இருந்தபோது பதவி கொடுக்கப்பட்டவர்களுக்கு தான் இப்போதும் பதவி வழங்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சியின் எல்லா சாதியினரும் உள்ளனர். இஸ்லாமியர் அவைத்தலைவராக உள்ளார். அதிமுக என்பது சாதி, மதத்துக்கு அப்பாற்ப்பட்ட கட்சி. ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள் அப்படி சொல்கிறார். அதிமுகவில் யாரும் சாதி பார்ப்பது இல்லை. கட்சியை காப்பாற்றுவேன் என்று சசிகலா கூறுவது 3 ஆண்டுகள் வேலைக்கு செல்லாமல் திடீரென வேலைக்கு செல்வது போல் உள்ளது. 2021ல் அரசியல் ஓய்வு எனக்கூறிய சசிகலா இப்போது ஏன் வருகிறார்” என பதில் கேள்வி எழுப்பினார்.
அடுத்ததாக, ‛‛அதிமுகவில் அடுத்தடுத்த சரிவுகளை சரிசெய்வதற்கான திட்டம் என்பது ஏதேனும் உள்ளதா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ‛‛எதை சரிவு என்று கூறுகிறீர்கள். தேர்தலில் தோல்வியடையாத கட்சி இருக்கிறதா? 1991ல் திமுகவுக்கு 2 எம்எல்ஏக்கள் தான் வந்தனர். 2014ல் ஒரு எம்பி கூட இல்லை. வெற்றி தோல்வி மாறி மாறி வரும். 2019ல் அதிமுக பலமான கூட்டணி அமைத்தது. அப்போது 19 சதவீத ஓட்டு கிடைத்தது. இப்போது கூட்டணி இல்லாமல் 20 சதவீத ஓட்டு கிடைத்துள்ளது. எங்களின் வளர்ச்சி ஒரு சதவீதம்” என்றார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமில்லை. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றிபெற்று அதிமுக தனிப் பெரும்பான்மையையோடு ஆட்சி அமைக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் நான் முதல்வராக இருந்தபோது கண்ணின் இமைபோல விவசாயிகளை பாதுகாத்து வந்தோம். நாகை மாவட்டத்தை புரட்டிப்போட்ட கஜா புயலின்போது அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்து சாதனை படைத்தோம். வறட்சி வருகின்ற நேரமெல்லாம் நிவாரண தொகைகளை வழங்கியது அதிமுக ஆட்சி.
டெல்டா விவசாயிகளின் நிலம் பறிபோக விடாமல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவித்தது மட்டுமல்லாமல், ஐந்தாண்டு கால ஆட்சியில் இரண்டு முறை கூட்டுறவு கடன் மற்றும் பயிர் கடன்களை தள்ளுபடி செய்தது அதிமுக அரசு. விவசாய தொழிலாளிக்கு பசுமை வீடு, கறவை மாடுகள், தடையில்லா உணவுப்பொருள் என வழங்கி ஏழை மக்களை பாதுகாத்த அரசு அதிமுக அரசு. குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்தது மட்டுமல்லாமல் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற உதவி செய்தோம். நாகை மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க மருத்துவ கல்லூரி உருவாக்கியதும் அதிமுக அரசுதான்” என்று அவர் பேசினார்.