யோகா, சிறுதானியங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து பஞ்சாயத்துக்கு தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பஞ்சாயத்துக்கு தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
‘நமக்கு மற்றும் சமுதாயத்துக்காக யோகா’ என்ற கருத்துருவின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. நமது முன்னோர்கள் நமக்கு வழங்கிய மிகப்பெரிய கொடை யோகா. இந்த யோகாவின் மூலம் நமது நாட்டை ஆரோக்கியமான நாடாக உருவாக்க முடியும்.
நாள்தோறும் யோகாசனம் செய்வதன் மூலம் உடல் நலன், மன நலனை பேண முடியும். நாள்தோறும் உணவில் சிறுதானியங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பருவநிலை மாறுபாட்டை தடுக்க முடியும்.சிறுதானியங்களின் விற்பனை அதிகரித்தால் குறு, சிறு விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்.
எனவே பஞ்சாயத்து தலைவர்கள், யோகா, சிறுதானியங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பஞ்சாயத்து அலுவலகங்கள், பள்ளிகள், அங்கன்வாடிகள், சமுதாயகூடங்களில் யோகா வகுப்புகளை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாளை மறுதினம் 10-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் காஷ்மீரின் ஸ்ரீநகர், தால் ஏரிப் பகுதியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக அவர் நாளை ஸ்ரீநகர் செல்கிறார். அன்றிரவு ஸ்ரீநகரில் தங்குகிறார். அடுத்த நாள் யோகாசன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி ஸ்ரீநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
கடந்த ஒரு வாரமாக காஷ்மீரில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர்.இந்த சூழலில் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஸ்ரீநகர் பகுதியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் சர்வதேச யோகாசன நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.