“மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழக அரசு மவுனம் சாதிப்பது ஏன்?” என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் 8,373 ஏக்கரில் அமைந்துள்ளது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். இதனை நிர்வகித்து வரும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (பிபிடிசி) 6 தலைமுறைகளாக பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 99 ஆண்டு கால குத்தகை 2028-ம் ஆண்டுதான் முடிவடைகிறது. அதற்குள் 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேயிலைத் தோட்ட தொழிலாளர்களிடம் விருப்ப ஓய்வு என்ற அடிப்படையில் கட்டாயமாக கையெழுத்துப் பெற்று வெளியேற்ற முயற்சி நடக்கிறது.
இதுகுறித்து விரிவாகப் பேச முதல்வரிடம் நேரம் கேட்டேன். இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. இந்தப் பிரச்சினை தொடர்பாக காவல்துறை, மாவட்ட ஆட்சியர், வனத்துறைக்கு மனு அளித்தும் பலனில்லை. முதல்வருக்கு கடிதமும் எழுதியுள்ளேன். கனிமொழி எம்பி-யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். வால்பாறை, கூடலூர் போல இந்த தேயிலைத் தோட்டத்தையும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் ஏற்று நடத்த வேண்டும்.
நாங்கள் அந்த தொழிலாளர்களை சந்தித்து பிரச்சினை பற்றி தெரிந்து கொள்ளச் சென்றால் காவல்துறையும், வனத்துறையும் தடுப்பது ஏன்? இந்த விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காப்பது ஏன்? என்று புரியவில்லை. உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. இந்நிலையில் தேயிலை தோட்டத்தை நிர்வகித்து வரும் நிர்வாகம் அங்குள்ள தொழிலாளர்களுக்கு ஒருவாரம் வேலை தரவில்லை. அந்த தொழிலாளர்களுக்கு வேறு வேலை தெரியாது. இந்நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும். இதைக் கருத்தில் கொண்டு இப்பிரச்சினையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.